Last Updated : 31 Jul, 2015 06:50 PM

 

Published : 31 Jul 2015 06:50 PM
Last Updated : 31 Jul 2015 06:50 PM

முதல் பார்வை: ஆரஞ்சு மிட்டாய் - இனிப்பும், புளிப்பும்

வசனம், பாடல் எழுதி விஜய் சேதுபதியே தயாரித்து நடித்த படம் என்ற காரணமே 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

'சூது கவ்வும்' படத்தில் நாற்பது வயதைக் கடந்தவராக நடித்த விஜய் சேதுபதி 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தில் அறுபது வயதைக் கடந்தவராக நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் ஆகப்பெரிய எழுதப்படாத விதி வயதானவரை ஹீரோவாக காட்டுவதில்லை. ஹீரோயின் இல்லாமல் ஹீரோவை தனியாகக் காட்டுவதும் அரிது. இந்த வழமையான இடத்தில் இருந்து அறுபது வயதைக் கடந்த முதியவர் கைலாசமாக விஜய் சேதுபதி ரசிகர்களை திருப்திப்படுத்துகிறாரா? தயாரிப்பாளராக ஜெயித்திருக்கிறாரா?

கதை ரொம்ப சிம்பிள்தான். தெனாவட்டை விட்டுக்கொடுக்காத முதியவர் தன் தனிமையைக் கழிக்க முடியாமல் ஆம்புலன்ஸை ஊர்வலம் செல்லும் தேராகப் பயன்படுத்திக்கொள்கிறார். அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லும் டிரைவரும், அவசர மருத்துவ உதவியாளரும் அந்த முதியவரால் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதற்குப் பிறகு குடைச்சல் தரும் அந்த முதியவர் என்ன ஆகிறார்? மருத்துவ உதவியாளர் என்ன செய்கிறார்? என்பது மீதிக் கதை.

அறுபது வயதைக் கடந்த முதியவராக விஜய் சேதுபதி கண்மூடி சாய்ந்திருப்பதாகக் காட்டும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது.

''ஒரு ஹார்ட் பேஷண்ட்டை இப்படியா நடக்க வெச்சு கூட்டிட்டு போவீங்க. ஒரு பேஷண்ட் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாது?'' என்று அறிமுகக் காட்சியிலேயே தெனாவட்டான ஆள் என்பதை புரிய வைக்கிறார்.

வீம்பாக ஸ்ட்ரெக்சரில் உட்கார்ந்துகொண்டு வருவது, ஆம்புலன்ஸில் பாட்டு கேட்பது, தடாலடியாக எகத்தாளம் செய்வது, நோயாளிக்கே உரிய எந்த பதற்றத்தையும் காட்டாமல் இயல்பாக பயணிப்பது என எல்லா விதத்திலும் ஸ்கோர் செய்கிறார்.

தாடி, மீசை, காவியேறிய பற்கள், கண்ணாடி என்று அறுபது வயதைக் கடந்த முதியவருக்கான நடை, உடை, பாவனைகளில் மனிதர் பின்னி எடுக்கிறார். அதுவும் ஆட்டோவில் இருந்து இறங்கிவிட்டு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடும்போது கிழி கிழி கிழி என்று கிழிக்கிறார்.

முதியவருக்கே உரிய அமெச்சூர்தனமான டான்ஸூம், ஸ்டைலும் அப்ளாஸை அள்ள வைத்தது. தனிமை, ஈகோ, அடம்பிடித்தல் என்று எல்லா உணர்வுகளையும் அழாமல், கண்ணீர் சிந்தாமல், புன்னகை செய்யாமல் பார்வையிலேயே உணர்த்திவிடும் நடிப்பு விஜய் சேதுபதிக்கு வாய்த்திருக்கிறது. அதுவே படத்தின் பெரிய பலம்.

அவசர மருத்துவ உதவியாளராக வரும் ரமேஷ் திலக் நடிப்பு, பாடி லேங்வேஜ் முதல் டயலாக் டெலிவரி வரை அவ்வளவு கச்சிதம். காதலியிடம் பேசுவதில் இருக்கும் கனிவைக் காட்டிலும், விஜய் சேதுபதியிடம் காட்டும் கனிவில் மனதில் நிற்கிறார்.

ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்திருக்கும் ஆறுமுகம் பாலா, ரமேஷ் திலக் காதலியாக நடித்திருக்கும் ஆஷ்ரிதா, விஜய் சேதுபதி மகனாக நடித்திருக்கும் கருணாகரன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கத்தை பிஜூ விஸ்வநாத் நிறைவாகச் செய்திருக்கிறார். வழக்கமான ஃபார்முலா சினிமாவில் இருந்து விலகி, இப்படி ஒரு படத்தைக் கொடுத்ததற்காக பிஜு விஸ்வநாத்துக்கு ஆயிரம் லைக்ஸ்.

விஜய் சேதுபதி வசிக்கும் கிராமம், ஆம்புலன்ஸ் பயணிக்கும் இடங்கள், ரமேஷ் திலக் காதல் எபிஸோட் என்று எல்லா ஏரியாவின் அழகையும் கேமராவில் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறார் பிஜூ விஸ்வநாத். எந்த ஃபிரேமும், ஷாட்டும் தேவையில்லை எனும் அளவுக்கு கிரிஸ்ப்பான கட்டிங்கில் கவனம் ஈர்க்கிறார். ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை படத்துக்கு மிகப் பெரிய பிளஸ்.

ஆனால், 'ஆரஞ்சு மிட்டாய்' எந்த எமோஷனையும் நமக்குள் கடத்தவில்லை. சுவாரஸ்யங்களுக்காகவே விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பயன்பட்டிருக்கிறது. அதனாலேயே நமக்குள் எந்த பாதிப்பும், அழுத்தமும் ஏற்படவில்லை.

ரோட் சைட் மூவி, பயணங்கள் வழியாக கதை சொல்வது என்ற வகையில் பார்த்தால் 'நந்தலாலா', 'அன்பே சிவம்' மாதிரியான படங்கள் உங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால், அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது 'ஆரஞ்சு மிட்டாய்'.

பெரியவர்களைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் வாழ்வின் சுவாரஸ்யங்களை தெரிந்துகொள்ளவும் விரும்பினால் 'ஆரஞ்சு மிட்டாய்' உங்களுக்கு இனிக்கும். ஒரு படமாக மட்டும் பார்த்தால் 'ஆரஞ்சு மிட்டாய்' புளிக்கும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x