செய்திப்பிரிவு

Published : 21 Aug 2019 20:18 pm

Updated : : 21 Aug 2019 20:18 pm

 

அவை விமர்சனங்கள் அல்ல, வீடியோக்கள் மட்டுமே: 'நேர்கொண்ட பார்வை' ஹெச்.வினோத் பேட்டி

nerkonda-paarvai-director-h-vinoth-interview
'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பில் அஜித்துடன் இயக்குநர் ஹெச்.வினோத் | கோப்புப் படம்

’No Means No’ என்ற வாசகத்தை தாங்கி வந்த 'நேர்கொண்ட பார்வை' ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பை பெற்றிருக்கிறது. கோலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக இப்படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் உருமாறி இருக்கிறார். அவருடன் ’இந்து தமிழ் திசை’ நடத்திய உரையாடல்...

மூலக்கதையில் இல்லாத சண்டைக்காட்சிகள், ரொமான்ஸ், பாடலை ஏன் சேர்த்தீர்கள், ரசிகர்களைத் திருப்திப்படுத்தவா?

கண்டிப்பாக, அஜித் ரசிகர்கள், ரசிக மனநிலையில் எதிர்பார்ப்புடன் தான் திரையரங்கம் வருவார்கள், அதைப் பூர்த்திசெய்யவேண்டியது அவசியம், அதைத்தான் செய்தேன்.

அஜித் பேசிய நிறைய வசனங்கள் புரியாமலேயே/ உள்வாங்கிக் கொள்ளாமலேயே ரசிகர்கள் கைதட்டினர். அவர்களை நீங்கள் சொன்ன 'நோ மீன்ஸ் நோ' சென்று சேரவில்லையா?

தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் ஒருவிதக் கொண்டாட்ட மனநிலையுடனே வருவார்கள். அவர்கள் அப்போது அதைக் கவனிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் சினிமா ஒருமுறை மட்டுமே ஒளிபரப்பப்படுவதில்லை. டிவி, சாட்டிலைட், சமூக வலைதளங்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படும். அப்போது நிதானமாகப் பார்க்க முடியும். அதுகுறித்த விவாதங்கள் எழுந்தாலே, ஆரோக்கியமான போக்கு உருவாக ஆரம்பிக்கும். அதைத்தான் விரும்பினேன்.

பிங்க் படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தை விட பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், தமிழில் பெண்களை விட அஜித்தே பிரதானமாக தெரிகிறாரே?


இந்தி ரசிகர்கள்.. அமிதாப் பச்சனை நாயகன் என்பதைத் தாண்டி இரண்டாம் நிலை கதாபாத்திரத்தில் பார்க்கப் பழகிவிட்டார்கள் அதனால் அவர்களால் அமிதாப்பை அந்த கதாபாத்திரத்தில் ஏற்றுக்கொள்ள முடிகிறது. அஜித்தை பொறுத்தவரை மக்கள் அவரை ஹீரோவாகவே பார்க்க விரும்புவார்கள், அதுதான் வித்தியாசம். இதை நீங்கள் ரீமேக் என்று கூறினாலும் ரசிகர்கள் இதனை அஜித் படம் என்றுதான் நினைத்து வருவார்கள். இதில் மாற்ற வேண்டும் என்றால் அஜித் சாரையே மாற்ற வேண்டும்.

அஜித் - போனி கபூர் என்று எல்லாம் முடிவு செய்யப்பட்டப் பிறகு இப்படத்திற்கு இயக்குநராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டீர்களா?

என்னைப் போன்று நிறைய இயக்குநர்களை இப்படத்திற்காக அணுகினார்கள். அதில் நான் தேர்வு செய்யப்பட்டேன்.

நேர்கொண்ட பார்வை பரவலான விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது? இதற்கான முழு பாராட்டையும் தமிழ் சினிமா எடுத்துக்கொள்ள முடியுமா?

கண்டிப்பாக இல்லை. படத்திற்கு ஒரிஜினலாக திரைக்கதை எழுதியவர்களுக்குத்தான் இந்தப் பாராட்டு சேர வேண்டும். இப்படத்திற்கு மூன்று பேர் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஒரு கதை எங்கிருந்து தொடங்குகிறது என்பது முக்கியம். எனவே இந்த கதையை உருவாக்கியவரைக் காண கொல்கத்தா சென்றோம். அவர், கொல்கத்தாவில் சற்று நவீன சிந்தனைகளைக் கொண்ட பகுதியில் வசித்து வந்திருக்கிறார்.

அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் புதிதாக குடி வருகிறார். இந்த நிலையில் அவரை பார்க்க வந்த நண்பர் ஒருவர் அந்த பெண்ணை தவறாக கூறுகிறார். "ஏன் அவ்வாறு அந்த பெண்ணை சொல்கிறீர்கள்?" என்று அவர் கேட்கும்போது "அந்த பெண் பீர் குடிக்கிறார். அந்த பெண் வீட்டுக்கு பசங்க நிறைய பேர் வருகிறார்கள்" என்று அவர் நண்பர் அதில் சொல்லும்போது அவருக்கு கோபம் வருகிறது.

"நீயும் அதைத்தானே செய்ற, அப்ப நீ யாரு?"ன்னு கேட்கும்போது அந்த நண்பர் அதிகம் கோபம் கொள்கிறார். "நானும் அந்த பெண்ணும் ஒன்றா?" என்று கேட்கிறார். இதுதான் இந்த கதையின் ஆரம்பம்.

நல்ல பெண்கள் என்று இச்சமூகம் அடையாளப்படுத்தப்படும் பெண்களுக்கு இம்மாதிரி நேர்ந்தால் மட்டுமே குரல் கொடுக்கப்பட வேண்டும். நல்ல பெண்கள் என்று இவர்கள் கூறும் அடையாளத்தில் இல்லாதவர்களுக்கு நேர்வது சரி என்று கூறுபவர்களுக்கு உங்கள் பதில்?

அம்மாதிரியான கதைகளை முன்வைத்து பெரிய இயக்குநர்களே கதை இயக்கி இருக்கிறார்கள். எனக்கு அதை பார்க்கும்போது நகைச்சுவையாக இருக்கிறது. ஆனால் நேர்கொண்ட பார்வை அந்தக் கதை அல்ல. இந்த படத்தில் வரும் பெண்கள் செய்வது சரியா, தவறா என்பதை பற்றி பேசுவது கூட இப்படத்தின் கதை அல்ல.

இம்மாதிரியான கேள்வி 20, 25 வயது இளைஞர்களுக்கு வருவது இல்லை, ஆனால் 30-ஐ கடந்தவர்களுக்கு வருகிறது என்று நான் கருதுகிறேன். அவர்கள் புரிந்து கொள்வதற்கு சில நேரம் தேவைப்படும் என்று நினைக்கிறேன்.

’நேர்கொண்ட பார்வை’ எடுப்பதற்கு முன்னர் தமிழ் ரசிகர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள் என்று நினைத்தீர்கள்? இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?

அதைப் பற்றிய எண்ணம் எனக்கு அப்போது வரவில்லை. நான் கவலையும் படவில்லை. படம் இப்படித்தான் வரப்போகிறது என்பதை முடிவு செய்துவிட்டோம். அதன்படியே தொடர்ந்தோம்.

இப்போது படம் வெளியாகிவிட்டது படத்தை பற்றி வரவேற்புகள் எப்படி இருக்கிறது?

ஒரு படம் வெளிவந்த பிறகு அதற்கான வரவேற்பு குறித்து நான் தேடிப் படிப்பதில்லை. யாராவது சொன்னால் மட்டுமே கேட்பேன். அதைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது.

படத்தில் சில காட்சிகளில் பாண்டே கதாபாத்திரம் சற்று ஓவர் ஆக்டிங்காக தெரிந்ததே?

அது நான் தெரிந்தே செய்ததுதான். பிங்க் படத்தில் முதல் 45 நிமிடங்கள் மெதுவாக செல்லும், திரையரங்க அனுபவம் என்று ஒன்று வேண்டும் இல்லையா அதற்கான சேர்த்ததுதான். அவர் இயல்பாகவே நடித்தார். திரையரங்கு வரும் ரசிகர்களுக்கு சந்தோஷமான அனுபவம் கிடைக்க வேண்டும். அதை வைத்து திட்டமிட்டு செய்ததுதான் அது.

விமர்சகர்கள் பற்றி என்ன நினைகிறீர்கள்?

எல்லோருக்கும் அவர்கள் துறை சார்ந்த அழுத்தம் இருக்கிறது. எங்களுக்கு இருக்கும் அழுத்தம் காரணமாக நாங்கள் சண்டை காட்சிகளை படத்தில் சேர்க்கிறோம். விமர்சகர்களை பொறுத்தவரை ஒருபடத்தை விமர்சனம் செய்வதை விட தனது வீடியோவை பார்க்க வரும் பார்வையாளர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். படம் நல்லா இருக்கா.. இல்லையா என்பது அவர்களுக்கு இரண்டாவதுதான். அவர்களை பொறுத்தவரை அது ஒரு வீடியோ. அதை நான் விமர்சனமாக பார்ப்பதில்லை.

ரசிகர்களை தவிர்த்து இப்படத்திற்காக உங்களுக்கு வந்த பெரிய பாராட்டுகள்?

ரஜினி சார், சூர்யா, ஜோதிகா, சிவகார்த்திகேயன் என நிறையப் பிரபலங்கள் பாராட்டினார்கள்... இவர்களைத் தவிர்த்து சில பெண்கள், ஆண்கள் உணர்வுபூர்வமான தங்கள் அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என தொடர்ந்து உண்மை சம்பவங்களை வைத்தே படம் எடுத்துள்ளீர்கள், உங்கள் கற்பனையில் எப்போது படத்தை எடுக்க போகிறீர்கள்?

அடுத்த வரப்போகிற படத்தில் ஆக்‌ஷன், கமர்ஷியல் என நீங்கள் கேட்ட அனைத்தும் இருக்கும்.

.

வினோத்அஜித்நேர்கொண்ட பார்வைபிங்க்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author