Last Updated : 30 Jun, 2015 03:12 PM

 

Published : 30 Jun 2015 03:12 PM
Last Updated : 30 Jun 2015 03:12 PM

தமிழ் சினிமா 2015 வசூலிஸ்ட்- 107-ல் 11 படங்களே ஹிட்!

இந்த ஆண்டு ஜூன் 26 வரை தமிழில் 107 படங்கள் வெளியாகியுள்ளன. இது ஒரு சாதனை. ஆனால் இவற்றில் மொத்தம் 11 படங்களே ஹிட் என்று சொல்லக் கூடிய அளவில், தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளன. 4 படங்கள் தயாரிப்பு செலவை மட்டும் சம்பாதித்துள்ளன. இந்த அரையாண்டில் 13 சதவீதம் ஹிட் படங்களாக உள்ளன. கடந்த ஆண்டு இது வெறும் 8 சதவீதமாக இருந்தது.

அரையாண்டின் சிறப்பம்சங்கள்

# காக்கா முட்டை, 36 வயதினிலே, டிமாண்டே காலனி ஆகிய படங்கள் சம்பாதித்த லாபத்தைப் பார்க்கும்போது, 'சிறியதே அழகு' என்பதே வெற்றிக்கான மந்திரமாக இருக்கும் போல தெரிகிறது. பெரிய நட்சத்திரங்கள் இன்றி, குறைந்த பட்ஜெட்டில் (ரூ.2.5 கோடி முதல் ரூ.5 கோடி வரை) சிறப்பாக எடுக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இது ஒரு புதிய போக்காக உருவாகியுள்ளது.

# தயாரிப்பு செலவில் பாதியை சம்பளமாகப் பெறும் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் (உத்தமவில்லன், மாஸு என்கிற மாசிலாமணி) வசூலில் எடுபடாமல் போனது. இதன் மூலம், படங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் நட்சத்திர நடிகர்கள், இயக்குநர்களின் சம்பளம் குறையவேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

# ராகவா லாரன்ஸின் சம்பளத்துடன் சேர்த்து ரூ.18 கோடியில் எடுக்கப்பட்ட காஞ்சனா 2, மாபெரும் வெற்றிப் படமாக ஆனது.

# படத்துக்கான ஓப்பனிங் நன்றாக இருக்க வேண்டுமென்றால் சிறப்பாக விளம்பரப்படுத்த வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இதில் பெரிய ஹீரோக்களின் படங்களும், சிறிய பட்ஜெட் படங்களும் வெவ்வேறு முறையில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். பாலிவுட்டைப் போல பெரிய நட்சத்திரங்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் படங்களை விளம்பரப்படுத்த வேண்டும்.

# தொலைக்காட்சி உரிமம் என்ற சந்தை முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது. அதிக படங்கள் தயாரிக்கப்படுவதால் தொலைக்காட்சி நிறுவனங்கள் படங்களை வாங்குவதை நிறுத்தியுள்ளன. படங்களின் தொலைக்காட்சி உரிமம் அதிக விலைக்கு விற்கப்படுவதும், படங்களை ஒளிபரப்பினால் வரும் வருமானம் குறைந்துள்ளதுமே இதற்கு காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. இந்த வருடம் வெற்றி பெற்ற 3 படங்களின் தொலைக்காட்சி உரிமம் இன்னும் விற்கப்படாமலேயே உள்ளன.

# அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் தமிழ் படங்களின் வெளிநாட்டு விநியோக சந்தை 10 - 15 சதவீதம் உயர்ந்துள்ளது. மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணிக்கு அமெரிக்காவில் கிடைத்த மிகப்பெரிய வசூல் இதற்கு ஓர் உதாரணம். அதே நேரத்தில், பெரிய நடிகர்கள் நடித்த படங்களின் தோல்விகளால், ஒரு காலத்தில் லாபகரமாக இருந்த தெலுங்கு டப்பிங் உரிமையும் தற்போது அடிவாங்கியுள்ளது. இந்த வருடம் தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றியடைந்த ஒரே படம் காஞ்சனா 2

பாஃப்டா திரைக் கல்லூரியின் இணை நிறுவனர் ஜி.தனஞ்ஜயன் பேசும்போது, "இந்த ஆண்டின் முதல் பாதி நன்றாகவே இருந்ததாகத் தெரிகிறது. வெளியான 100 படங்களில் 15 படங்கள் லாபகரமாக அமைந்துள்ளன. கடந்த 3 வருடங்களில் இருந்ததை விட இது சிறந்த விகிதமாகும். காமெடி கலந்த பேய் படங்களைத் தாண்டி, சுவாரசியமான கதையமசம் உள்ள படங்களும் மக்களை ஈர்த்துள்ளன. ஆண்டின் இரண்டாம் பாதி இன்னும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்" என்றார்.

தேசிய விருது வாங்கிய காக்கா முட்டை மாபெரும் வெற்றி கண்டுள்ளது சிறந்த அறிகுறியாக இருக்கிறது. நடிகர் தனுஷும் இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்து தயாரித்த இந்தப் படம் ரூ.2.5 கோடிக்கு ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. அவர்கள் மேலும் ரூ. 2 கோடி செலவழித்து படத்தை விளம்பரப்படுத்தினார்கள். தற்போது காக்கா முட்டை திரையரங்கம் மூலமாக மட்டும் மூன்று வாரங்களில் ரூ.15 கோடியை வசூலித்துள்ளது.இதில் 80 சதவீதம் தமிழகத்தில் மட்டும் வசூலாகியுள்ளது.

காக்கா முட்டை படத்தின் தொலைக்காட்சி உரிமம் விஜய் டிவியால் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து போன்ற தமிழ் சினிமாவுக்கு அறிமுகமில்லாத சந்தைகளிலும் காக்கா முட்டை படத்தை வெளியிட ஃபாக்ஸ் ஸ்டார் முயன்று வருகிறது. சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளதால் இந்தப் படத்துக்கான சந்தைக்கு வானமே எல்லை.

2015-ஆம் ஆண்டின் முதல் பாதியில் வந்த முக்கியப் படங்களின் வசூல் விவரம்

1. ஐ (தமிழ் + தெலுங்கு + இந்தி) - ரூ.190 கோடி

2. காஞ்சனா 2 (தமிழ் + தெலுங்கு) - ரூ.98 கோடி

3. என்னை அறிந்தால் (தமிழ் + தெலுங்கு) - ரூ.78 கோடி

4. மாஸு (தமிழ் + தெலுங்கு) - ரூ.63 கோடி

5. அநேகன் (தமிழ் + தெலுங்கு) - ரூ.49 கோடி

6. காக்கி சட்டை (தமிழ் மட்டும்) - ரூ.47 கோடி

7. உத்தம வில்லன் (தமிழ் + தெலுங்கு) - ரூ.38 கோடி

8. ஓ காதல் கண்மணி (தமிழ் + தெலுங்கு) - ரூ.33 கோடி

9. கொம்பன் (தமிழ் மட்டும்) - ரூ.31 கோடி

10. ரோமியோ ஜூலியட் (தமிழ் மட்டும்) - ரூ.22 கோடி

அனைத்து புள்ளி விவரங்களும் தோராயமானவை ஆனால் படங்களின் உண்மையான வசூல் நிலையை பிரதிபலிப்பதே.

தகவல்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வியாபரத்தில் ஈடுபட்டுள்ள இன்ன பிற நபர்களிடமிருந்தும், tamilboxoffice1.com இணையதளத்திலிருந்தும் திரட்டப்பட்டவை.

© தி இந்து, ஆங்கிலம்,
தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x