Last Updated : 09 Jun, 2015 12:00 PM

 

Published : 09 Jun 2015 12:00 PM
Last Updated : 09 Jun 2015 12:00 PM

கண்டா காமாட்சி, காணாட்டி மீனாட்சி. இதுதான் சினிமா யதார்த்தம்: தம்பி ராமையா சிறப்பு பேட்டி

நடிப்பில் குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லத்தனம் என்று பல பரிமாணங்களையும் கச்சிதமாக செய்துவரும் தம்பி ராமையா, ‘தண்ணிவண்டி’ படப்பிடிப்புக்காக மதுரை வந்திருந்தார். பூங்கா முருகன் கோயிலில் படப்பிடிப்பு இடைவேளையில் அவரைச் சந்தித்தோம். நேரிலும் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாகப் பேசினார். இனி தம்பி ராமையாவுடன்..

எல்லா காமெடி நடிகர்களும் நாயகனாக நடிக்கிறார்கள். நீங்கள் எப்போது?

இப்பவே நாயகன்தானே? ‘மைனா', ‘கும்கி', ‘கழுகு' படங்கள்ல என் கதாபாத்திரத்தை நீக்கிட்டுப் பார்த்தா, நல்லாருக்குமா? இருக்காதுல்ல. அப்ப நானும் ‘கதா’நாயகன்தானே?

நடிப்பில் தேசிய விருது வாங்கிவிட்டீர்கள். அடுத்தது?

சினிமாவில் நடிப்பு அல்லாத இன்னொரு துறையில் சாதிக்கணுங்கிறது என் ஆசை. அது இயக்கமாகவோ, கதை எழுதுவதாகவோ இருக்கலாம். வாழ்வியல் சார்ந்த ஒரு கதையைப் படமாக்கி, விருது வாங்க வேண்டும் என்ற நோக்கமும் இருக்கு. விருது படமான்னு அதிர்ச்சி அடையாதீங்க. ‘பாக்ஸ் ஆபீஸ் ஹிட்’டும் ஆகி விருதும் பெறணும் என்பதுதான் லட்சியம்.

அப்படியென்றால் படம் இயக்க தயாராகிவிட்டீர்களோ?

ஏற்கெனவே ஒரு படம் இயக்கியிருக்கேன். சில படங்கள்ல உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்கேன். ஒவ்வொரு படத்திலும் நடிப்பை மட்டுமே கவனிக்காம, அந்தந்த இயக்குநர்கள்ட்ட இருந்து நிறைய விஷயங்களை உள்வாங்கி இருக்கேன். தொழில்நுட்பம், பாடல் கம்போஸிங்னு புதிசு புதுசா கத்துக்கிட்டிருக்கேன்.

அந்த அனுபவங்களை வைத்து, முன்பைவிட சிறப்பா ஒரு படம் எடுக்கணும்னு ஐடியா இருக்கு. ஒரு கதையும் இருக்கிறது. ஓய்வு நேரத்தில் திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம் எழுதிட்டிருக்கேன். இசை அமைக்கும் ஆர்வமும் இருக்கிறது. சில மாதத்தில் அறிவிப்பு வரும்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள், இசையா? டி.ஆர். பாணியாக இருக்கிறதே?

அது எளிதான காரியம் இல்லையே. ‘விழித்திரு’ படத்துக்காக டி.ஆர். எழுதி, பாடிய பாடலின் படப் பிடிப்பு நடந்தது. டி.ஆர்., நான் நடனமாடும் காட்சி அது. எப்படி நடனம் ஆடுறதுன்னு நடன இயக்குநர் ரிச்சர்டு விளக்கினார். அப்போது குறுக்கிட்ட டி.ஆர்., ‘ரொம்ப விளக்கமா சொல்ல வேணாம். தம்பி ராமையா தாள ஞானம் உள்ளவர்தான்’ன்னு சொன்னார். ரொம்ப பெருமையா இருந்துச்சு.

நகைச்சுவை நடிகர்களின் மகன்கள் நாயகனாகிறார் கள். உங்கள் மகன்?

விஜய்யுடன் ‘புலி’, ஆர்யாவுடன் ‘யட்சன்’, சந்தானத்துடன் ‘இனிமே இப்படித்தான்’, கண்மணி இயக்கத்தில் ஒரு பேய் படம், ஜெயம் ராஜாவின் படம் என்று கையில் ஆறேழு படங்கள் இருக்கின்றன எனக்கு.

கிடைக்கிற கொஞ்ச நேரத்தை இலக்கியத்துக்காக ஒதுக்குறேன். ஒரு நாளுக்கு 10 பக்கமாவது படிக்கணும், 5 பக்கமாவது எழுதணும்கிறதை தவம்போல கடைப்பிடிச்சிட்டு வர்றேன். ‘அனுபவ முகடுகள்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதும் எண்ணமும் இருக்கிறது.

ஆனால், குடும்பத்தில சம்பாதிக்கிற ஆள் நான் மட்டும்தான். மகனும் சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டா, புத்தகத்தில் முழுமையா கவனம் செலுத்தலாம். பார்க்கலாம்.

இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தை இயக்கியிருக்கிறீர்கள். வடிவேலுவுடனான நட்பு பற்றி?

அவர் ஒரு படத்துல நடிக்கிறார். நான் இன்னொரு படத்துல நடிக்கிறேன். அவங்கவங்க வேலையை பார்க்கிறோம் அவ்வளவுதான். சினிமாவை பொறுத்தவரை, யாருடன் சேர்ந்து வேலை பார்க்கிறோமோ அப்போதைக்கு அவர்கள்தான் நண்பர்கள். யாரைப் பார்த்தாலும், ‘அண்ணே எப்படியிருக்கீங்க.. இப்பதான் உங்கள நினைச்சேன்’னு சொல்லிக்குவோம். கண்டா காமாட்சி, காணாட்டி மீனாட்சி. இதுதான் சினிமா யதார்த்தம்.

நடிகர் சங்கத்தில் சரத்குமார், ராதாரவி தரப்புக்கும் நாசர், விஷால் தரப்புக்கும் மோதல் வலுக்கிறதே?

நடிகர் சங்கப் பிரச்சினை பற்றி கருத்து சொல்லுற அளவுக்கு இன்னும் நான் வளரல தம்பி.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x