

விவசாய புரட்சியையும், கார்ப்பரேட்டு நிறுவனங்கள் விவசாயிகளை எப்படி ஏமாற்றுகிறன்றன என்பதையும் மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம், ‘ஏ படம்’.
இதில் ராஜகணபதி கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேகா ஸ்ரீ, சந்திரபோஸ், மஸ்காரா அஸ்மிதா, சுஷ்மிதா என பலர் நடித்துள்ளனர். கேஷ்லெஸ் ஷிவாகோ இயக்கியுள்ளார். ஜோஸ் பிராங்கிளின் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னை, ஏலகிரி, ஏற்காடுபகுதியில் நடைபெற்றுள்ளது. பிப். 27-ல் வெளியாகும் இப்படத்தை மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரித்துள்ளார்.
படம் பற்றி அவர் கூறும்போது, “விவசாயிகளின் பிரச்சினையைப் பேசும் படம் இது. இதற்குத் தணிக்கைச் சான்றிதழ் வாங்கும்போது மிகவும் சிரமத்தை எதிர்கொண்டோம். சுமார் 45-க்கும் மேற்பட்ட காட்சியில் கட் கொடுத்தார்கள். இதனால் சுமார் 18 மாதங்கள் நீதிமன்ற வாசலில் அலைந்து சிரமப்பட்டு தணிக்கை சான்றிதழ் பெற்றோம். ஒரு வழியாக பிப். 27-ல் படம் திரைக்கு வருகிறது” என்றார். இதன் முதல் தோற்றத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.