Last Updated : 17 Jan, 2014 01:15 PM

 

Published : 17 Jan 2014 01:15 PM
Last Updated : 17 Jan 2014 01:15 PM

தமிழனின் சாதனையைப் போற்றும் மலையாளப் படம் : ஜே.சி. டேனியல்

மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கமலின் 'செல்லுலாய்ட்' திரைப்படத்தின் தமிழ் மாற்று 'ஜே.சி. டேனியல்'. இந்தியத் திரைப்பட நூற்றாண்டைச் சிறப்பிக்கும் நோக்கில் மலையாளத்தின் முதல் திரைப்படத்தை உருவாக்கிய ஜே.சி.டேனியலுக்கு அளிக்கப்பட்ட திரைப்பட மறுவாழ்வு கமலின் இந்தப் படம். கேரளத்தின் தென்பகுதியான திருவிதாங்கூரில் நடத்தப்பட்ட டேனியலின் முன்னோடி முயற்சி தமிழில் பேசப்பட இரண்டு காரணங்கள் உள்ளன. அன்றைய திருவிதாங்கூர் பகுதி இன்றைய தமிழ்ப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கியது. டேனியல் தனது முன்னோடி முயற்சிகளுக்கு உந்துதலாகத் தமிழில் திரைப்படங்கள் உருவாகியிருந்ததைக் கொண்டிருக்கிறார். படத்தின் இடையே வரும் காட்சிகளும் வசனங்களும் அதைச் சுட்டிக் காட்டுகின்றன.

'பம்பாயில் கோவிந்த பால்கே சினிமா பிடித்துப் பணக்காரராகியிருக்கிறார். மதராசில் நடராஜ முதலியாரும் முதல் சினிமா எடுத்துப் பெரிய ஆளாகியிருக்கிறார். திருவிதாங்கூரில் அதைச் செய்து இந்த ஜே.சி. டேனியல் பெரிய ஆளாவான்' என்று மனைவி ஜானெட்டிடம் சொல்கிறார் டேனியல் (பிருத்விராஜ்). மலையாள சினிமாவின் தந்தையாக மதிக்கப்படும் டேனியல் பிறப்பால் தமிழர் என்பது இந்தப் படம் தமிழ் வடிவம் பெறுவதற்கான இரண்டாவது காரணம்.

திரைப்படக் கலை மீதான பெரும் ஆர்வத்தால் அதில் ஈடுபட்ட டேனியல் அவர் கனவு கண்டபடி பெரும் செல்வந்தராகவோ புகழ் பெற்றவராகவோ ஆகவில்லை. வறுமையில் தள்ளப்பட்டார். கடனாளியாகித் தலைமறைவாக வாழ்ந்தார். அவரது முன்னோடி முயற்சி அடையாளம் காணப்படாமல் போனது. காலம் மூடி மறைத்த டேனியலின் கதையையே படம் சொல்கிறது. சுமாரான வசதியுள்ள குடும்பத்தில் பிறந்த ஜே.சி. டேனியல் தன்னுடைய பகுதியான திருவிதாங்கூரில் முதல் மலையாளப் படத்தைத் தயாரிக்க முற்படுகிறார்.

தனது நிலபுலன்களை விற்று நிதி திரட்டியும் பம்பாய்க்கும் சென்னைக்கும் சென்று அறிவைத் தேடியும் அந்த முயற்சியில் ஈடுபடுகிறார். ‘ஆனால் அன்றைய சமூகத்தில் அதற்கு மதிப்பு இருக்கவில்லை. அது கீழான செயலாகக் கருதப்படுகிறது. அதனால் பெண்கள் அதில் பங்கேற்பது இழிவாகப் பார்க்கப்படுகிறது. ‘விபச்சாரிகள்தான் அதில் பங்கேற்பார்கள்' என்று சொல்லப்படுகிறது.

அரும்பாடுபட்டுத் திரைப்படத் தயாரிப்பைத் தொடங்கிய டேனியலுக்குக் கலை சார்ந்த சமூகப் பிரச்சனையாக முன் நிற்பது இந்த ஒவ்வாமை. படத்தில் நடிக்கப் பெண்ணைத் தேடி அலுத்து உள்ளூர்ப் பெண்ணான ரோசம்மாவை நடிக்க வைக்கிறார். தீண்டப்படாத சாதி என்று முத்திரை போடப்பட்ட புலையர் இனப் பெண்ணான ரோசம்மாவும் குடும்பமும் கிறித்துவ மதத்தைத் தழுவியதால் ஏற்கனவே சாதிப் பற்றாளர்களின் கோபத்துக்கு இலக்கானவர்கள். அவர் நடிக்கப் போவதை அருவெருப்புடன் பார்க்கிறது மேட்டுக்குடிச் சமூகம். டேனியல் படமாக எடுக்க விரும்பும் கதையில் அவளுக்கு அளிக்கப்படுவது உயர் சாதியான நாயர் பெண்ணின் பாத்திரம். அதை படக் குழுவில் இருக்கும் ஒருவரே எதிர்க்கிறார்.

சினிமாவில் தீண்டாமையும் விலக்கும் இல்லை'என்று நம்பும் டேனியல் அவரை சரோஜினி என்ற நாயர் பெண்ணாக நடிக்கவைத்துப் படப்பிடிப்பை முடிக்கிறார். படத்தின் முதல் திரையிடலே அலங்கோலமாகிறது. ‘‘ தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த பெண் நடிப்பது மட்டுமல்லாமல் உயர் சாதிக்காரியாக வேடம் கட்டுவதைச் சகித்துக்கொள்ள முடியாது'' என்று சாதியச் சமூகம் சீறுகிறது. திரைப்படக் காட்சியை நிறுத்தியதோடு ரோசியாக மாறிய ரோசம்மாவைக் கொல்லவும் விரட்டுகிறது. உயிர் தப்பி ஓடும் ரோசி பின்னர் என்ன ஆனார் என்று அறிய முடியாமல் போகிறது. மலையாள சினிமாவின் முதல் நாயகி தனது முகத்தைத் திரையில் பார்க்கவே முடியாமல் மறைந்து போகிறார். இது படத்தின் முதல் இழை.

‘விகதகுமாரன்' என்ற முதல் படம் தந்த அதிர்ச்சிக்குப் பின்னர் டேனியல் எந்த விவரங்களும் இல்லாமல் மறைகிறார். அவர் என்ன ஆனார் என்று பத்திரிகையாளர் ஒருவர் தேடுவது படத்தின் இரண்டாவது இழை.

சம்பவம் தந்த கசப்புக்கும் தோல்விக்கும் பிறகு கடனாளியாகும் டேனியல் பல் மருத்துவம் கற்று மருத்துவத் தொழில் ஈடுபடுகிறார். வசதியான வாழ்க்கைக்குத் திரும்பும் அவரை மறுபடியும் சினிமா ஈர்க்கிறது. மீண்டும் கைப்பொருள் இழந்து வறுமைக்குள் விழுகிறார். மனைவியைத் தவிர மக்களும் சுற்றமும் அவரை விட்டு விலகுகிறார்கள். அப்போதுதான் பத்திரிகையாளர் அவரை மீண்டும் கண்டடைகிறார். மலையாள சினிமாவின் முன்னோடி அவர் என்று நிறுவ பத்திரிகையாளர் மேற்கொள்ளும் முயற்சி படத்தின் மூன்றாம் இழை.

‘விகதகுமாரன்' படத்தின் பிரதிகள் அழிந்து போயிருக்கின்றன. அப்படி ஒரு படம் எடுக்கப்பட்டதற்கான ஸ்தூலமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்ற காரணத்தால் அவரது முன்னோடி முயற்சி புறக்கணிக்கப்படுகிறது.

ஆனால் உண்மையான காரணம் ஆதாரமில்லை என்பதல்ல. பேசாப்படமாக எடுக்கப்பட்ட ஒன்றை எப்படி முதல் மலையாளப் படம் என்று சொல்வது? இரண்டாவது அதை எடுத்தவர் ஒரு தமிழர். மூன்றாவது ஒரு மாபெரும் கலையின் முன்னோடி, சாதியில் குறைந்த நபர். அவரை எப்படி முன்னிறுத்துவது?

இந்தக் காரணங்களால் டேனியலின் திரையுலகத் தந்தைமை மறுக்கப்படுவதும் பின்னர் உண்மையின் வலுவால் நிலைபெறுவதும் படத்தின் மீதிக் கதை.

இந்திய சினிமாவின் ஆரம்ப முயற்சிகளை ஒப்பிடும்போது டேனியலின் ‘விகதகுமாரன் ' பல விதங்களில் உண்மையாகவே முன்னோடி முயற்சிதான். தொடக்க கால இந்தியப் படங்கள் பெரும்பான்மையும் புராணக் கதைகளை மையமாகக் கொண்டவை. டேனியலின் படம் சமூக நாடகத்தை மையமாகக் கொண்டது. ஆரம்ப காலப் படங்களில் பெண் வேடங்களில் ஆண்களே நடித்தனர். அல்லது விலைமாதர்களே அந்தப் பாத்திரங்களை ஏற்றனர். ஒரு பெண்ணைத் திரைப்படத்தில் பங்கேற்கச் செய்த முதல் இயக்குநர் டேனியல் மட்டுமே. ‘கலைக்குச் சாதியில்லை' என்ற தனது நம்பிக்கையை அழுத்தமாக உணர்த்த அன்றைய தீண்டத்தகாத சாதிப் பெண்ணை நடிக்க வைத்த பெரும் துணிவும் அவருக்கே உரியது. அவரது துணிவைப் பொது சமூகம் உதாசீனப்படுத்தியது என்ற குற்ற உணர்ச்சியையும் அதற்குக் கழுவாயாக அவரை ஒரு மாநில மொழி சினிமாவின் முன்னோடியாக இன்று போற்றுகிறது என்ற ஆறுதலையும் கமலின் படம் பார்வையாளனிடம் ஏற்படுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x