Last Updated : 17 May, 2019 05:19 PM

 

Published : 17 May 2019 05:19 PM
Last Updated : 17 May 2019 05:19 PM

முதல் பார்வை: மான்ஸ்டர்

ஒரு எலியால் பாதிக்கப்பட்டு, சிக்கி சின்னாபின்னமாகும் நாயகனின் கதையே 'மான்ஸ்டர்'.

மின்வாரியத்தில் ஊழியராகப் பணிபுரியும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. சொந்த வீடு வாங்கினால் நிச்சயம் திருமணம் நடக்கும் என்று நம்பி சூர்யா ஒருவழியாக சொந்த வீடு வாங்குவதற்காக வீடு பார்க்கிறார். அந்த நேரத்தில் பெண் பார்க்க வரச் சொல்லிவிட்டு, பார்க்காமலேயே போன பெண், செல்போனில் பேசி ஸாரி கேட்கிறார்.

தனக்கு நல்ல நேரம் வந்துவிட்டதாக நினைத்து சூர்யா, அந்த வீட்டையே வாங்குகிறார். ஆனால், அந்த வீட்டில் இருக்கும் எலி இல்லாத சில பல தொல்லைகளைக் கொடுத்து சூர்யாவைப் பாடாய்ப்படுத்துகிறது. நிம்மதி இழந்து, வலியால் அவதிப்படும் சூர்யா, அந்த எலியை என்ன செய்கிறார், எலியைத் தேடி ஒரு கும்பல் எதற்காக வருகிறது, சூர்யாவுக்குத் திருமணம் நடந்ததா போன்ற கேள்விகளுக்கு அழகாகவும் எளிமையாகவும் பதில் சொல்கிறது திரைக்கதை.

'ஒருநாள் கூத்து' மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் 'மான்ஸ்டர்' மூலம் இன்னொரு உயிர் மீதான கரிசனத்தை, அன்பைப் படம் முழுக்கப் பரவவிட்டுள்ளார்.

எதிர் நாயகனாக மெர்சல் காட்டிய எஸ்.ஜே.சூர்யா நாயகனாக தன்னை நிரூபித்துள்ளார். கல்யாணம் ஆகாத வெறுமை, பெண் துணை இல்லாத தனிமை, எலியின் சேஷ்டைகளால் தூக்கம் தொலைத்த பொழுதுகள், அப்பழுக்கற்ற வெள்ளந்தி மனம், போதாமை என்று எல்லா உணர்வுகளையும் மிகச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார். வள்ளலாரைப் பின்பற்றும் நாயக பிம்பத்தை கச்சிதமான நடிப்பில் கொண்டுவந்து தேர்ந்த நடிகனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.

பிரியா பவானி சங்கர் அழுத்தமாக முத்திரை பதிக்கிறார்.  புன்னகையில் மலர்ந்து கண்களால் ஜாலம் காட்டி உரையாடல்களில் நேசம் கொட்டி தன் இருப்பைப் பதிவு செய்யும் விதம் அழகு. படத்தின் உறுதுணைக் கதாபாத்திரமாக வரும் கருணாகரன் நகைச்சுவையால் அப்ளாஸ் அள்ளுகிறார்.

எலியின் பார்வையிலும் நாயகனின் பார்வையிலும் கோகுல் பெனாயின் ஒளிப்பதிவு வித்தியாசமான கோணங்களில் ஈர்க்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் அந்தி மாலைப் பொழுது பாடலும், டபக்குன்னு பாடலும் வசீகரிக்கின்றன.

''என் பிரச்சினையை மத்தவங்ககிட்ட சொன்னா இதெல்லாம் ஒரு பிரச்சினையான்னு சிரிக்குறாங்க'', ''அழகுங்கிறது பார்க்குறதுல இல்லை... உணர்றதுல்ல இருக்கு'', ''உண்மை பொய்னு எதுவும் இல்லை... எல்லாம் நம்புறதுல இருக்கு'' போன்ற சங்கர் தாஸின் வசனங்கள் படத்துக்கு வலு சேர்க்கின்றன.

ஒரு எலியால் இவ்வளவு அவஸ்தைகளா என்று புருவம் உயர்த்தும் அளவுக்கு சங்கர் தாஸ்- நெல்சன் வெங்கடேசனின் திரைக்கதை துல்லியமாகப் பயணிக்கிறது. படத்தில் தேவையற்ற காட்சிகள் என்று எதுவுமே இல்லாத அளவுக்கு நேர்த்தியாக உள்ளது. எலிக்குள் நடக்கும் கம்யூனிகேஷனைச் சொல்லும் விதம் நம்பகத்தன்மைக்கான சான்று. 

எலியால் ஏற்படும் பாதிப்புகளைப் பட்டியலிடாமல், ரஸ்க், சோபா, கோட் என்று எல்லாவற்றையும் தின்றுவிட்டு தன்னைத் தின்ன எலி காத்திருக்கிறதா என்று எஸ்.ஜே.சூர்யா கோபத்துடனும் வலியுடனும் பேசும் விதம் இயக்குநரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. இந்த ஒற்றை முடிச்சுக்குள் காதல், திருமணம், வைரம் என்று துணைக் களத்தைப் பயன்படுத்திருக்கும் இயக்குநரின் சாமர்த்தியத்துக்குத் தனி பூங்கொத்து.

மனிதனை மனிதனே மதிக்காத இந்தக் காலகட்டத்தில் எல்லா உயிர்களும் இம்மண்ணில் வாழப் பிறந்தவையே என்ற நோக்கத்தில் இன்னொரு உயிர் மீது அன்பு செலுத்தச் சொல்லும் மான்ஸ்டரை மனதார வரவேற்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x