Last Updated : 25 Jan, 2019 08:16 PM

 

Published : 25 Jan 2019 08:16 PM
Last Updated : 25 Jan 2019 08:16 PM

முதல் பார்வை:  சார்லி சாப்ளின் - 2   

பிரபுதேவாவின் வாழ்வில் சாரா என்ற பெயரில் இருவர் குறுக்கிடுகிறார்கள். சந்தர்ப்ப சூழலால் இருவரையும் காதலிப்பதாகவே பிரபுதேவா கூறுகிறார். இறுதியில் யாரைக் கரம் பிடிக்கிறார் என்பதே 'சார்லி சாப்ளின் - 2'. 

மேட்ரிமோனியல் இணையதளம் நடத்துகிறார் பிரபுதேவா. 99 திருமணங்களை நடத்திய தன் மகன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற ஏக்கமும் கவலையும் பிரபுதேவாவின் பெற்றோருக்கு ஏற்படுகிறது. இந்த சூழலில் சாராவை (நிக்கி கல்ராணி) பார்க்கிறார். அவரது உதவும் உள்ளத்தால் காதலில் விழுகிறார். ஒரு கட்டத்தில் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதிக்கின்றனர். ஆனால். நண்பன் ஒருவனால் சாராவாகிய நிக்கி கல்ராணியை சந்தேகப்பட்டு மதுபோதையின் உச்சத்தில், கோபத்தில் பேசி அதை வாட்ஸ் அப் வீடியோவாக அனுப்புகிறார்.

ஆனால், நிக்கி கல்ராணி மீது எந்தத் தவறுமில்லை என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு தான் செய்த தவறை பிரபுதேவா உணர்கிறார்.  நிக்கி வீடியோவைப் பார்த்தால் திருமணமே நின்றுவிடும் இக்கட்டான நிலையில் பிரபுதேவா என்ன செய்கிறார், அதனால் வரும் பிரச்சினைகள் என்ன, இன்னொரு சாரா யார்?  யாரை பிரபுதேவா திருமணம் செய்துகொள்கிறார் போன்ற கேள்விகளுக்கு கட்டுப்பாடற்ற எல்லையில் சென்று ஒருவழியாக பதில் சொல்லி முடித்த திருப்தியில் நிற்கிறது திரைக்கதை.

16 ஆண்டுகளுக்குப் பிறகு 'சார்லி சாப்ளின்' படத்தின் 2-ம் பாகத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். ஆனால் இது படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. அதற்கான எந்தத் தொடர்ச்சியும், 'சார்லி சாப்ளின்' படத்தில் இருந்த எந்த அமசமும்  இதில் இல்லை.

பிரபுதேவா முதல் பாதியில் சாதாரணமாக வந்துபோகிறார். இரண்டாம் பாதியில் காதலியைச் சமாளிக்கும் இடங்களில் மட்டும் ஸ்கோர் செய்கிறார். நிக்கி கல்ராணியின் கதாபாத்திரத்தில் எந்த சிறப்பும் இல்லை. அதா ஷர்மா, நிக்கி, சந்தனாராஜ், மீனாள் உள்ளிட்ட அத்தனை பெண் கதாபாத்திரங்களும் ஏனோதானோவென்று உள்ளன. எந்தக் கதாபாத்திரமும் முழுமையடையவில்லை.

பிரபுவும் கடமைக்கு வருகிறார், பேசுகிறார், நடிக்கிறார், சிரிக்கிறார்.  விவேக் பிரசன்னா, அரவிந்த் ஆகாஷ், சாம்ஸ் என்று நகைச்சுவை அணியினரும் இழுவையில் தள்ளுகிறார்கள்.

சவுந்தரராஜனின் ஒளிப்பதிவுதான் படத்தின் ஒரே ஆறுதல். அம்ரிஷ் பொருந்தாத இடங்களில் பாடல்களைச் செருகி வருத்தப்பட வைக்கிறார். சின்ன மச்சான் பாடலுக்கும் படமாக்கப்பட்ட விதத்துக்கும் உள்ள பத்து வித்தியாசங்கள் என்று பட்டியல் போடும் அளவுக்கு பொருந்தாமல் இருக்கிறது. பின்னணி இசையிலும் அம்ரிஷால் அசதியும் அவதியுமே மிச்சம்.

ஆள் மாறாட்டம், புஷ்பா புருஷன், ஆள் மாறாட்டம்,  குறிப்பிட்ட பொருளைக் களவாடும் காட்சி என  தமிழ் சினிமாவில் பார்த்துப் பார்த்துச் சலித்த காட்சியையே ரிப்பீட் அடிக்கிறார்கள். லாஜிக்கும் இல்லை, நகைச்சுவைக்கான மேஜிக்கும் மிஸ்ஸிங். மொத்தத்தில் 'சார்லி சாப்ளின் - 2' தலைப்பில் இருக்கும் ஈர்ப்பைப் படத்தில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாகிவிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x