Last Updated : 05 Oct, 2018 05:23 PM

 

Published : 05 Oct 2018 05:23 PM
Last Updated : 05 Oct 2018 05:23 PM

முதல் பார்வை: ராட்சசன்

சுமார் 16 வயதுள்ள பள்ளி மாணவிகளைத் தேடிக் கொல்லும் சைக்கோ கொலைகாரன் யார் என்று போலீஸ் கண்டுபிடித்தால் அதுவே 'ராட்சசன்'.

பொருளாதாரப் பிரச்சினை துரத்தினாலும் சினிமா இயக்குநராகும் கனவில் விடாமல் ஓடுகிறார் அருண் (விஷ்ணு விஷால்). குடும்பச் சூழல் பாரமாய் அழுத்த, ஒரு கட்டத்தில் அப்பா பார்த்த போலீஸ் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம். மாமாவின் வழிகாட்டுதலில் முறைப்படி தேர்வு எழுதி எஸ்.ஐ.ஆகிறார். நகரத்தில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தொடர்ந்து ஒரே மாதிரியான முறையில் முகமும், மற்ற உறுப்புகளும் சிதைக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர். இந்தத் தொடர் கொலைகளைச் செய்யும் குற்றவாளியைப் பிடிக்கும் முனைப்பில் ஆர்வம் காட்டுகிறார் விஷ்ணு விஷால். ஆனால், அவரது உயர் அதிகாரிகள் தரப்பில் அவமானங்களே அவருக்குப் பரிசாகக் கிடைக்கின்றன. ஈகோ, தடைகள், குறுக்கீடுகள் என ஒவ்வொன்றாய் முளைத்து அவரையே கைது செய்யும் சூழல் உருவாகிறது. உண்மையில் இந்தத் தொடர் கொலைகளுக்குக் காரணம் யார், அதன் பின்னணி என்ன, கொலையாளியைப் பிடிக்க முடிந்ததா என்ற கேள்விகளுக்கு பரபரப்பும் விறுவிறுப்பும் கலந்து பதில் சொல்கிறது திரைக்கதை.

'முண்டாசுப்பட்டி' படத்தின் மூலம் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த இயக்குநர் ராம்குமார் அதற்கு எதிரான தளத்தில் நின்று சஸ்பென்ஸ் கலந்த உளவியல் த்ரில்லர் படத்தைக் கொடுத்து சொல்லி அடித்திருக்கிறார். அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆர்வமில்லாமல் சப் இன்ஸ்பெக்டர் ஆகும் விஷ்ணு விஷால் கொலையைச் சுற்றி நடக்கும் மர்மங்கள் குறித்து விசாரிக்கும் போது முழுமையான போலீஸ் அதிகாரியாக மாறி விடுகிறார். அது கதை நாயகனுக்கான பாத்திரப் படைப்பில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கொலைகாரனை நெருங்கும் போது நடுக்கத்தையும், அக்கா மகள் காணாமல் போனதில் பதற்றத்தையும், எதிராளியின் மனநிலை சமநிலையைக் குலைக்க கையாளும் யுத்தியில் பக்குவமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகனுக்கான அம்சங்கள் அழகாய் கைவரப் பெற்றிருக்கும் விஷ்ணுவிடம் சிறந்த படங்களில் 'ராட்சசன்' முதலிடம் வகிக்கிறது. காக்கிச்சட்டை விஷ்ணுவுக்கு கம்பீரம் சேர்த்திருக்கிறது.

பள்ளி ஆசிரியையாக அமலாபால் வந்துபோகிறார். ஹியரிங் எய்டு சம்பந்தப்பட்ட அந்தக் காட்சியிலும், ஆட்டோ ஓட்டுநரைத் தேடும் காட்சியிலும் கதையின் திருப்பத்துக்குப் பயன்பட்டிருக்கிறார்.

சிரிப்பு கேரக்டரிகளிலேயே நடிக்கும் முனீஸ்காந்த் என்கிற ராம்தாஸும், காளிவெங்கட்டும் சீரியஸ் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்கள். அதிகாரத் தோரணையில் ஈகோவுடன் முறைப்பு காட்டும் சூசன், போலீஸ் உயர் அதிகாரி கஜராஜா, நிழல்கள் ரவி, ராதாரவி, வினோதினி ஆகியோர் படத்தின் கதையோட்டத்தில் இயல்பாய்ப் பொருந்திப் போகிறார்கள்.

ஜிப்ரானின் இசையும், பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவும் படத்துக்கு மிகப்பெரிய பலம் சேர்க்கின்றன. சான் லோகேஷ் காதலே என்ற பாடலுக்கு மட்டும் யோசிக்காமல் கத்தரி போட்டிருக்கலாம்.

ஒருதலைக் காதலால் நடக்கும் விபரீதங்கள், ஆள் கடத்தல் குற்றங்கள், பாலியல் பலாத்காரங்கள் என்று பெண்களைச் சுற்றிலும் இருக்கும் பிரச்சினைகளை மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராம்குமார். சம்யுக்தா, அமுதா, மீரா, அம்மு என்ற நான்கு மாணவிகளின் கொலை குறித்த விவரணைகள், கொலை செய்யப்பட்ட விதம் பீதியை வரவழைக்கிறது. தடயம் இல்லாமல் தவிக்கும் போலீஸார் துப்பு துலங்க கிப்ட் பாக்ஸ், பொம்மையைக் க்ளூவாகக் கொடுத்திருப்பது சிறந்த திரைக்கதை உத்தி.

ஆட்டோ டிரைவர், பள்ளி ஆசிரியர் என அடுத்தடுத்த சந்தேகங்கள் எழ, அனைத்தும் ஒரு கட்டத்தில் மாறி மிகப்பெரிய மோசமான விளைவைச் சந்தித்த ஒருவனின் மனநிலைப் பிறழ்வுதான் காரணம் என்பதை தர்க்க ரீதியாக விளக்கியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. பள்ளி மாணவியைக் காப்பாற்றப் போய் அங்கு வெளிப்படும் ஒரு ட்விஸ்ட், மேஜிக் ஷோ செய்யும் ஆசிரியைத் தேடிப்போக அங்கு வெளிப்படும் இன்னொரு ட்விஸ்ட் என கதையின் திருப்பங்கள் கச்சிதத் தன்மையுடன் அமைகின்றன.

குற்றவாளி ஏன் சம்பந்தமில்லாத பல பள்ளி மாணவிகளைக் கடத்துகிறார், காளி வெங்கட் ஏன் குற்றவாளியைக் கையும் களவுமாகப் பிடித்தும் கோட்டை விடுகிறார், நிழல்கள் ரவி ஏன் ஆள் அரவமற்ற பகுதியில் போய் ஒளிய முயற்சிக்கிறார் போன்ற சில குறைகள் படத்தில் உள்ளன. ஆனால், மலைக்க வைக்கும் அளவுக்கு உழைப்பைக் கொட்டி நுட்பமான திருப்பங்களில் கவனிக்க வைத்த விதத்தில் 'ராட்சசன்' கவனிக்க வைக்கிறான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x