இளையராஜா ஸ்டூடியோவில் ‘ஓ பட்டர்ஃப்ளை’, ‘பூவே செம்பூவே’ பாடல்களுக்கு நடனமாடிய ரஷ்ய கலைஞர்கள்

இளையராஜா ஸ்டூடியோவில் ‘ஓ பட்டர்ஃப்ளை’, ‘பூவே செம்பூவே’ பாடல்களுக்கு நடனமாடிய ரஷ்ய கலைஞர்கள்
Updated on
1 min read

இசையமைப்பாளர் இளையராஜாவின் சென்னை ஸ்டூடியோவுக்கு வந்த ரஷ்ய நாட்டு நடனக் கலைஞர்கள் அவரது இசையமைப்பில் மீரா படத்தில் இடம்பெற்ற ‘ஓ பட்டர்ஃப்ளை’, சொல்லத் துடிக்குது மனசு படத்தில் இடம்பெற்ற ‘பூவே செம்பூவே’ பாடல்களுக்கு கண்கவர் வகையில் நடனமாடினர்.

அவர்களுக்கு நன்றி தெரிவித்து அந்த வீடியோவை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த இளையராஜா, “ரஷ்யாவில் இருந்து வந்து எனது ஸ்டூடியோவில் சிறப்பான நிகழ்ச்சியை நிகழ்த்திய நடனக் கலைஞர்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். அவர்களின் நடனம் நளினமாக, உணர்வுபூர்வமானதாக, இதயத்தை தொடுவதாக, குற்றம் குறை ஏதுமின்றி வசீகரிக்கக் கூடியதாக இருந்தது ” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்திய - ரஷ்ய கலாச்சார மையத்தின் பொதுச் செயலாளர் பி.தங்கப்பன் ஏற்பாடு செய்திருந்தார். தமிழகத்தில் ஜனவரி 17 தொடங்கி பிப்ரவரி 3 வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய நடனக் குழுவிடம் அவர் இந்த இரண்டு பாடல்களையும் பரிந்துரைத்து அவை மேற்கத்திய நடனத்துக்கு ஏற்ப இருப்பதால் நடனமாட வேண்டும் என்று கோரியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட நடனக்குழுவின் தலைவர் கலீனா, இளையராஜா ஸ்டூடியோவில் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

இது குறித்து கலீனா, “இளையராஜா இசையமைப்பில் உள்ள மெல்லிசையின் வனப்பால் நாங்கள் ஈர்க்கப்பட்டுள்ளோம். அவரது இசையில் ஆன்மிகம் வழிகிறது. இந்த இரண்டு பாடல்களும் பேரானந்தத்தையும், கற்பனையையும் உள்ளடக்கியுள்ளது. ஒரு கலைஞனாக அவர் தான் உணர்வதை அழகாக வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளார். அந்தப் படைப்புக்கு நடனமாடியதில் எங்களுக்கு மகிழ்ச்சி.” என்று கூறியுள்ளார்.

சென்னை ரஷ்ய மையத்தின் தலைவர் அலக்ஸாண்டர் டெடோனோவ், “தமிழ் மொழி இசைத்துவமானது” என்று பாராட்டியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in