Published : 14 Mar 2024 09:17 AM
Last Updated : 14 Mar 2024 09:17 AM

“எனக்குள்ள இருக்கிற ‘ஸ்டூடன்ட்’டை பாதுகாக்கணும்!” - ‘அயலி’ அனுமோள் பேட்டி

தமிழில் வெளியான ‘கண்ணுக்குள்ளே’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர், அனுமோள். பிறகு மலையாளத்துக்குச் சென்ற அவர், இரு மொழிகளிலும் நடித்துவருகிறார். ‘அயலி’ வெப் தொடருக்குப் பிறகு தமிழ் ரசிகர்களிடம் அதிகம் அறியப்பட்டிருக்கும் அனுமோள், இலக்கிய ஆர்வம் கொண்டவர். வெப் தொடர் ஒன்றுக்காக சென்னை வந்தவரிடம் பேசினாம்.

உங்க நடிப்பு பயணம் தொடங்கியது எப்படி?

நாலு வயசுலயே அப்பாவை இழந்துட்டேன். கிராமத்துலவளர்ந்ததால சினிமா பற்றி அதிகம் தெரியாது. தியேட்டர்ல போய் படம் பார்க்கிறதை ஊர்ல, அப்ப குத்தமா சொல்வாங்க. பிறகு என்ஜினீயரிங் முடிச்சுட்டு குடும்பத்தோட கொச்சி வந்துட்டோம். சினிமாவில நடிச்சா பணம் கிடைக்கும், கலர் கலரா டிரெஸ் போடலாம்னு நினைச்சுதான் நடிக்க வந்தேன். ஒரு சேனல்ல நிகழ்ச்சிதொகுப்பாளரா வேலை பார்த்துக்கிட்டே, நடிக்க வாய்ப்பு தேடினேன். முதல்ல மலையாள படம்தான் கமிட் ஆனேன். அப்ப ஒரு நண்பர் மூலமா தமிழ்ல ‘கண்ணுக்குள்ளே’ வாய்ப்பு வந்தது. அதுல நாயகியா அறிமுகமானேன். பிறகு ‘ராமர்’னு ஒரு படம் பண்ணினேன். அடுத்து மலையாளத்துல நடிக்க ஆரம்பிச்சேன்.

உங்க முதல் படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாலயே, நிறைய வாய்ப்புகள் வந்ததாமே?

மலையாளத்துல நான் அறிமுகமான படம், பி.பாலச்சந்திரன் இயக்கிய ‘இவன் மேகரூபன்’. இதுமலையாள கவிஞர் குன்னிராமன் நாயரோட வாழ்க்கைக் கதை. இதுல 5 ஹீரோயின்ல நானும் ஒருத்தி. படத்துல எனக்கு ஒருபாடல் காட்சி இருந்தது. அந்தப் பாடல் பயங்கரமா ஹிட் ஆச்சு. நானும் கவனிக்கப்பட்டேன். இந்தப் படம் பண்ணும் போதே, அதுல வேலை பார்த்த டெக்னீஷியன்கள் மற்ற இடங்கள்ல, ‘அனுமோள்நல்லா நடிக்கிறா’ன்னு சொல்லியே நிறைய வாய்ப்புகள் எனக்குக் கிடைச்சது. அப்பலாம் சினிமாவை நான் சீரியஸா எடுத்துக்கிட்டதில்லை. விளையாட்டுத்தனமா இருந்தேன். ஷூட்டிங் நடக்கும்போது பக்கத்துல இருக்கிற வீடுகள்ல போய் உட்கார்ந்து கதை பேசிட்டு இருப்பேன். அசிஸ்டென்ட் டைரக்டர்கள் என்னைத் தேடி வந்து ஷாட்டுக்கு கூட்டிட்டுப் போவாங்க.

பிறகு எப்ப சினிமாவை சீரியஸா பார்க்க ஆரம்பிச்சீங்க?

ஃபஹத் ஃபாசிலோட ‘அகம்’ பண்ணும்போதுதான் சினிமா, இவ்வளவு சீரியஸா?ன்னு உணர ஆரம்பிச்சேன். நான் சினிமாவைக் கத்துக்க ஆரம்பிச்சதும் அங்க இருந்துதான். சினிமாவுல நிலைச்சு நிற்கணும்னா அதுபற்றி நிறைய தெரிஞ்சுக்கணும்னு ஆசை வந்தது. ஒரு மாணவியா இன்னும் கத்துக்கிட்டுதான் இருக்கேன். இந்தப்படத்துல நடிச்சிட்டு இருக்கும்போது மேக்கப்மேன் பட்டணம் ரஷீது சொல்லி, ‘சாயில்யம்’னு ஒரு படத்துல வாய்ப்புகிடைச்சது. அதுல ஏற்கெனவே ஒரு முன்னணி ஹீரோயின்நடிக்க இருந்து, அவங்க நடிக்காததால என்னை நடிக்கச்சொன்னாங்க. கதையை கேட்டுட்டு, ‘அனுபவம் உள்ள நடிகைஇந்த கேரக்டர்ல நடிச்சாதான் நல்லாயிருக்கும்’னு சொன்னேன். ‘நம்பிக்கையோட வாங்க, நான் பார்த்துக்கிறேன்’னுசொன்னார் இயக்குநர் மனோஜ் கனா. இந்தப் படம் என் நடிப்பு திறமையை இன்னும் வெளிப்படுத்துச்சு. நிறைய விருதும் அங்கீகாரமும் கிடைச்சது. இதே போல பல விருது படங்கள்ல நடிச்சிருக்கேன்.

‘ஒரு நாள் இரவில்’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தீங்க. ஏன் தொடரலை?

அந்தப் படத்துல பாலியல் தொழிலாளியா நடிச்சேன். இங்க என்னன்னா, ஒரு கேரக்டர்ல நடிச்சு, அது பிடிச்சுட்டா, அதே மாதிரி கேரக்டர்லயே நடிக்கக் கூப்பிடற பழக்கம் இருக்கு. தமிழ்ல நிறைய வாய்ப்புகள் வந்தது. எல்லாமே, பாலியல்தொழிலாளி, அல்லது அதுதொடர்பான கேரக்டர்கள்தான். ஏற்கெனவே நடிச்ச ஒரு கேரக்டர்ல திரும்பவும் ஏன் நடிக்கணும்னு நிராகரிச்சுட்டேன். கரோனாவுக்குப் பிறகுதான் ‘அயலி’ வாய்ப்பு வந்தது. அது எனக்கு நல்ல அங்கீகாரத்தை தந்தது. எங்கயாவதுமக்கள் பார்த்தாங்கன்னா, அந்த குருவம்மாகேரக்டரை சொல்லிப் பேசுவாங்க. மகிழ்ச்சியா இருக்கும்.பிறகும் அதே மாதிரி கேரக்டராகவே வந்ததால, சில படங்களை ஏத்துக்கலை. இப்ப மோகன் நடிக்கிற ‘ஹரா’ படத்துல அவர் மனைவியா நடிக்கிறேன்.

நீங்க நடிச்ச 4 படம், ஒரு வெப் சீரிஸ் ஒரே நாள்ல ஓடிடி-யில வெளியாகி இருக்கே?

மகளிர் தினத்துல அதை வெளியிட்டாங்க. நான் நடிச்ச ‘பத்மினி’, ‘டு மென்’, ‘உடலாழம்’ படங்கள் கேரள அரசோட, சி ஸ்பேஸ் (Cspace) ஓடிடி தளத்துல வெளியாச்சு. ‘ராணி’, மனோரமா மேக்ஸ் தளத்துல வெளியாச்சு. ‘ஹார்ட் பீட்’ வெப் தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்ல வெளிவந்தது. ஒரே நாள்ல 4 படங்கள் வெளியாகறது மகிழ்ச்சியான விஷயம்தானே. இதுல, ‘பத்மினி’, பி.கே.பத்மினிங்கற ஓவியரோட பயோபிக். இது நிறைய பட விழாக்களுக்கு போன படம். ‘ஹார்ட் பீட்’ வெப் தொடர்ல, ‘அயலி’ கேரக்டருக்கு மாறான பாத்திரம்.

தமிழ், மலையாளத்துல நடிக்கிறதுல என்ன வித்தியாசத்தை உணர்றீங்க?

வித்தியாசம்னு எதுவும் தெரியல. சினிமா படப்பிடிப்பு எல்லாமே ஆக்‌ஷன், கட்டுக்கு நடுவுலதான். மலையாளத்தை ஒப்பிடும்போது தமிழ் சினிமா இன்டஸ்ட்ரி பெரியது. வியாபாரம், பார்வையாளர்கள் எல்லாமே அதிகம். அதனால இங்க நடிகர்களுக்கான ட்ரீட்மென்ட், பேமன்ட் ரொம்ப நல்லா இருக்கு.

சினிமா, ஆணாதிக்கம் கொண்ட துறைன்னு சொல்றாங்க. குணசித்திர நடிகையா நீங்க எதிர்கொள்கிற பிரச்சினைகள் என்னவா இருக்கு?

சினிமா மட்டுமல்ல, இந்த உலகமே ஆணாதிக்கம் கொண்டதாகத் தான் இருக்கு. சமூகமே அப்படி இருக்கிறதால சினிமாவை மட்டும் குறைசொல்ல முடியாது. சினிமால எனக்கு எந்த பிரச்சினையும் வந்ததில்லை. சில நடிகைகள் அவமரியாதையை சந்திச்சதா கேள்விபட்டிருக்கேன். இப்ப சில மாறறங்களை சினிமாவில பார்க்க முடியுது. இந்த மாற்றம் படிப்படியா அதிகரிக்கும்னு நம்பறேன்.

சினிமாவில மற்ற துறைகள்ல ஈடுபடும் எண்ணம் இருக்கா?

புது புது கதாபாத்திரங்கள்ல நடிக்கணும். சினிமா பற்றி நிறைய தெரிஞ்சுக்கணும், எனக்குள்ள இருக்கிற ‘ஸ்டூடன்ட்’டை எப்பவும் அப்படியே பாதுகாத்து வச்சிருக்கணும்னு நினைக்கிறேன். அது பேராசைதான். சில பேராசைகள் தேவையா இருக்கு. நடிப்புல நிறைய சாதிக்கணும். அதுமட்டும்தான் இப்ப என் இலக்கு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x