Published : 06 Jan 2024 08:55 AM
Last Updated : 06 Jan 2024 08:55 AM

பந்தய புறா பின்னணியில் பைரி: இயக்குநர் ஜாண் கிளாடி

முழுவதும் ‘புறா’பந்தயத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது, ‘பைரி பாகம்-1’. சையது மஜீத், மேக்னா எலன், விஜி சேகர் உட்பட புதுமுகங்கள் நடித்திருக்கிற இதன் டீஸர் கவனிப்பைப் பெற்றிருக்கிறது. தென் தமிழகப் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தை டி.கே. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி துரைராஜ் தயாரித்திருக்கிறார். சக்தி பிலிம் பேக்டரி வெளியிடும் இந்தப் படத்தின் இயக்குநர் ஜாண் கிளாடியிடம் பேசினோம்.

புறா பந்தய பின்னணியில ஏற்கெனவே சில படங்கள் வந்திருக்குதே? ஆமா. தனுஷின் ‘மாரி’ போல சில படங்கள் வந்திருக்கு. இது அதுல இருந்து வேறயா இருக்கும். புறா பந்தயங்கள்ல நிறைய வகை இருக்கு. மாரி படத்துல காட்டியிருக்கிறது கர்ணபுறா பந்தயம். சென்னை, தூத்துக்குடி, மதுரை மாதிரியான இடங்கள்ல ஹோமர் பந்தயம், ஃபேமஸ். இது என்னன்னா, கிளப் மூலமா, சுமார் ஒரு குறிப்பிட்ட கிலோமீட்டர் தூரத்துல பறக்க விடுவாங்க. அது எவ்வளவு சீக்கிரம் வீட்டுக்குத் திரும்பி வருதுங்கறது போட்டி. மாரி படத்துல வந்த கர்ண புறா பந்தயத்துல. அது பல்டி அடிக்கும். எத்தனை பல்டி அடிக்குதோ, அதன்படி வெற்றி இருக்கும். நாகர்கோயில், கன்னியாகுமரி பகுதியில, வளர்ப்புப் புறா பந்தயம் நடைமுறையில இருக்கு. இது என்னன்னா, காலைல 6 மணிக்கு இரண்டு தரப்பு, 2 புறாக்களை பறக்கவிட்டா, அது தன்னோட கூட்டுக்கு மேல சரியான நேரத்துல கிராஸ் பண்ணணும், எத்தனை முறை கிராஸ் பண்ணணுங்கறது உட்பட சில ரூல்ஸ் இருக்கு. அதை பின்னணியா வச்சு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

‘பைரி’ன்னா என்ன அர்த்தம்? ‘பைரி'ங்கறது ஃபால்கன் என்றுசொல்ற பருந்தோட பெயர். பந்தயத்துக்கு புறா வளர்க்கிறவங்களோட பெரிய எதிரியே இந்த பைரி தான். பந்தயத்துக்காக, 30 புறா வளர்த்தா, 3 புறா மிஞ்சறதே பெரிய விஷயம். புறாக்களை பைரி தூக்கிட்டுப் போறது, வாடிக்கையான ஒன்று. இதே போல வாழ்க்கையில உயரத்துல இருக்கிறவங்களை கடந்து ஒரு சிலர்தான் சாதிக்க முடியுது. இதை மையமா வச்சுதான் இந்தப் படம் உருவாகறதால, இந்த தலைப்பை வச்சோம்.

இந்தப் பந்தய புறா பின்னணியில என்ன விஷயம் சொல்றீங்க? சில தலைமுறைகளாக இந்தப் போட்டி இப்ப வரைக்கும் நடந்துகிட்டு இருக்கு. இந்தப் போட்டியால குடும்பங்களுக்குள்ள ஏற்படற மோதல், இழப்புகள் பெருசா இருக்கு. தன் மகன் இதுக்குள்ள வந்துரவே கூடாதுன்னு நினைக்கிறாங்க, அம்மா. ஆனா, அதை மீறி மகன் இந்தப் போட்டிக்குள்ள வந்தா என்ன நடக்கும் அப்படிங்கறதுதான் கதை. நாகர்கோயில் பின்னணியில, யதார்த்தமாக எடுத்திருக்கோம்.

நாளைய இயக்குநருக்காக நீங்க எடுத்த குறும்படம்தானே பைரி... ஆமா. குறும்படத்துல சின்ன ஐடியாவாதான் பண்ணியிருந்தோம். அதுல பெருசா கதை சொல்ல முடியாது. ஆனா, கதைக்கு அதிக ஸ்கோப் உள்ள சப்ஜெக்ட் அப்படிங்கறதால, இதுக்கான திரைக்கதை அருமையா வந்திருக்கு.

புறா தொடர்பான காட்சிகளை எடுப்பது கஷ்டமாச்சே? உண்மைதான். கிராபிக்ஸ்ல பண்ணியிருக்கோம். 900 சிஜி ஷாட்ஸ் பண்ணினோம். படத்துல 700 சிஜி ஷாட்ஸ் இருக்கு. அது கிராபிக்ஸுன்னு தெரியாத மாதிரிதான் இருக்கும். படத்துல நிறைய புதுமுகங்கள் நடிச்சிருக்காங்க. நிஜமா புறா வளர்க்கறவங்களையே இதுல நடிக்க வச்சிருக்கோம். கண்டிப்பா இந்தப் படம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும். பிப்ரவரில ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x