Published : 29 Nov 2023 02:16 PM
Last Updated : 29 Nov 2023 02:16 PM

“போலியான வருத்தத்துக்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது” - ஞானவேல்ராஜா அறிக்கைக்கு சசிகுமார் பதிலடி

ஞானவேல்ராஜா (இடது), சசிகுமார் (வலது)

’பருத்திவீரன்’ பட சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நிலையில் அது போலியான வருத்தம் என்று எதிர்வினையாற்றியுள்ளார் நடிகர், இயக்குநர் சசிகுமார்.

இதுதொடர்பாக சசிகுமார் இன்று (நவ.29) வெளியிட்ட அறிக்கையில், “அமீர் அண்ணன் ஞானவேல்ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன?

“நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால்...” என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல்ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன?

திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்?
இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல்ராஜா சொல்ல வருவது என்ன?

பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு?” என்று வினவியுள்ளார்.

முன்னதாக இன்று காலை ஞானவேல்ராஜா வெளியிட்ட அறிக்கையில், ”பருத்திவீரன் பட சர்ச்சை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை அதைப் பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் நான் அவரைக் குறிப்பிடுவேன். ஆரம்பத்தில் இருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன்.

அவர் சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்குப் பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவரைப் புண்படுத்தி இருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை வாழவைக்கும் சினிமா துறையையும், அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு தற்போது சசிகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

பிரச்சினையின் பின்னணி: கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ‘பருத்திவீரன்’ படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக தன்னுடைய தரப்பு விளக்கத்தை அமீர் அறிக்கையாக வெளியிட்டிருந்தார். அதன் நீட்சியாக ஞானவேல்ராஜாவுக்கு இயக்குநர்கள் பாரதிராஜா, சுதா கொங்கரா, கரு.பழனியப்பன், சசிகுமார், நடிகர்கள் பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பாடலாசிரியர் சினேகன் எனப் பலரும் எதிர்புக் குரல் எழுப்பினர். எதிர்ப்புக் குரல்கள் வலுத்த நிலையில் இன்று வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் ஞானவேல்ராஜா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x