’மாவீரன்’ படத்தின் ‘வண்ணாரப்பேட்டையில’ பாடல் எப்படி?

’மாவீரன்’ படத்தின் ‘வண்ணாரப்பேட்டையில’ பாடல் எப்படி?
Updated on
1 min read

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ படத்தின் இரண்டாவது பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது.

தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'ஆடை', 'மண்டேலா' ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ’வண்ணாரப்பேட்டையில’ என்ற பாடலை படக்குழு இன்று (ஜூன் 14) வெளியிட்டுள்ளது.

இப்பாடலை யுகபாரதி எழுத சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளனர். ‘வண்ணாரப்பேட்டையில ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்.. பொல்லாத காதல் வர அது லவ்பேர்டா மாறிடுச்சாம்’ என்ற வரிகளுடன் தொடங்கும் இந்த பாடல் ரீல்ஸ், ஷார்ட்ஸ் என ட்ரெண்ட் ஆகும் என்பது உறுதி. துள்ளலான இசையுடன் 2கே கிட்களை மனதில் எழுதப்பட்ட வரிகள் கேட்டதுமே மனதில் ஒட்டிக் கொள்கின்றன.

வரும் ஜூலை 14-ம் தேதி அன்று ‘மாவீரன்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

'வண்ணாரப்பேட்டையில' பாடல் லிரிக்கல் வீடியோ:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in