சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் குரலில் ‘மாவீரன்’ 2-வது சிங்கிள் ஜூன் 14-ல் வெளியீடு

சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் குரலில் ‘மாவீரன்’ 2-வது சிங்கிள் ஜூன் 14-ல் வெளியீடு
Updated on
1 min read

ஜூன் 14-ம் தேதி சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘வண்ணாரபேட்டையில’ பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள ஜாலியான வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு 'ஆடை', 'மண்டேலா' ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘வண்ணாரபேட்டையில’ பாடல் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை சிவகார்த்திகேயன், அதிதி இணைந்து பாடியுள்ளனர். யுகபாரதி பாடல் வரிகளை எழுதியுள்ளார். வரும் ஜூலை 14-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in