

தணிக்கை வாரியம் அறிவிப்பு திரையரங்குகளில் வெளியாகும் அனைத்து மொழி இந்தியத் திரைப்படங்களுக்கும் மார்ச் 15 (நாளை) முதல் சப்-டைட்டிலும் காது கேளாதோருக்கான விளக்கக் குறிப்புகளும் கட்டாயம் என மத்திய தணிக்கை வாரியம் அறிவித்துள்ளது.
திரைப்பட தணிக்கையில், கடந்த 2024-ம் ஆண்டு மத்திய அரசு சில புதிய விதிகளை அறிவித்தது. அதன்படி, காது கேளாதவர்கள் படங்களைப் புரிந்து கொள்ளும் வகையில் சப்-டைட்டிலும் பார்வையற்றவர்களுக்காக ஒலி வடிவில் காட்சிகளை விவரிப்பதும் சேர்க்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. மார்ச் - 15 முதல் அதை மத்திய தணிக்கை வாரியம் கட்டாயமாக்கி உள்ளது.
இப்புதிய முறைப்படி அனைத்து இந்திய மொழித் திரைப்படங்களையும் தணிக்கைக்கு சமர்ப்பிக்கும் போது சப்-டைட்டில், ஒலி வடிவம் ஆகியவற்றுடன் இணைத்து அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் மட்டுமே தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்தப் புதிய அறிவிப்பு சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சப்-டைட்டில், ஒலி வடிவம் ஆகியவற்றுடன் படத்தைப் பார்த்தால் அது சினிமா பார்க்கும் அனுபவத்துக்கு இடையூறாக இருக்கும் என்றும் படம் பார்க்கும்போது, கீழே சப்-டைட்டிலில் வரும் வார்த்தைகளைப் பார்ப்பது கவனத்தை சிதறடிக்கும் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.