

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்கும் ‘ஜெய் ஹனுமான்’ படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
‘ஹனுமான்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பின் மூலம் இந்திய அளவில் பேசப்படும் இயக்குநராக மாறினார் பிரசாந்த் வர்மா. அதற்குப் பிறகு பல்வேறு படங்கள் அறிவிக்கப்பட்டாலும், எதுவுமே தொடங்கப்படாமல் உள்ளது. இறுதியாக ரிஷப் ஷெட்டி நடிக்க ‘ஜெய் ஹனுமான்’ படப்பிடிப்பை படப்பூஜையுடன் தொடங்கியுள்ளார் பிரசாந்த் வர்மா.
டி-சீரிஸ் நிறுவனம் வழங்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் ‘ஜெய் ஹனுமான். ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. ’காந்தாரா 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ரிஷப் ஷெட்டி நாயகனாக நடிக்கும் படம் இது. இதில் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த கட்டமாக இப்படம் உருவாகிறது. கடவுள் ஹனுமான் பிறந்த புனித தலமாக நம்பப்படும் கர்நாடக மாநிலம் ஹம்பி, விஜயநகரில் உள்ள அஞ்சனாத்ரி பெட்டா மலைப்பகுதியில் பூஜையுடன் படம் துவங்கப்பட்டது. டி-சீரிஸ் நிறுவனத் தலைவர் பூஷன் குமார் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
அனில் ததானி கேமராவை இயக்க, முதல் ஷாட்டை ’ஹனுமான்’ படத்தின் நாயகன் தேஜா சஜ்ஜா இயக்கினார். மேலும், அனில் ததானி, பூஷன் குமார், நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் ஆகியோர் இணைந்து திரைக்கதையை இயக்குநர் பிரசாந்த் வர்மாவிடம் கொடுத்தனர். முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வழக்கமான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.