

நடிகர் மகேஷ் பாபு
ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ திரைப்படத்தில் ராமருக்கும் கும்பகர்ணனுக்கும் இடையிலான 30 நிமிட போர்க்காட்சி இடம்பெற இருப்பதாக விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘வாரணாசி’. ஆக் ஷன் அட்வெஞ்சர் ஃபேன்டஸி படமான இதன் கதையை ராஜமவுலியின் தந்தை, விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். இதில் மகேஷ்பாபு ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அவருடைய கதாபாத்திரம் ராமருடன் தொடர்புடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’ என்ற பாத்திரத்திலும், பிருத்வி ராஜ் சுகுமாரன் ‘கும்பன்’ (கும்பகர்ணன்) என்ற வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படம், 2027ம் ஆண்டு ஏப்.7ல் வெளியாகிறது. முக்கியமான காட்சிகள் கென்ய காடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. அண்டார்டிகா உள்பட பல நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் ராமருக்கும் கும்பகர்ணனுக்கும் இடையிலான 30 நிமிட போர்க் காட்சி பிரம்மாண்டமாக இடம் பெற இருப்பதாகக் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். ராஜமவுலி, தனது சாகசக் கதையில் புராணப் பின்னணியை தனித்துவமான முறையில் கலந்திருக்கிறார் என்கிறார்கள்.