புகழஞ்சலி | ‘நான் சிரித்தால் தீபாவளி’ உள்பட பல ஹிட் பாடல்களை பாடியவர் ஜமுனா ராணி!

புகழஞ்சலி | ‘நான் சிரித்தால் தீபாவளி’ உள்பட பல ஹிட் பாடல்களை பாடியவர் ஜமுனா ராணி!
Updated on
1 min read

தென்​னிந்​தி​யத் திரை​யுல​கின் மூத்த பின்​னணிப் பாடகி ஜமுனா ராணி, வயது முதிர்வு காரண​மாகப் பெங்களூருவில் கால​மா​னார். அவருக்கு வயது 88.

ஆந்​தி​ராவைச் சேர்ந்த ஜமுனா ராணி, கே.வரதராஜுலு, திரவுபதி தம்​ப​தியருக்கு 1938-ம் ஆண்டு பிறந்​தார். இவரின் தாயார் வீணை இசைக்​கலைஞர். ஜமுனா ராணி தன் 7 வயதில் ‘தி​யாகய்​யா’ என்ற தெலுங்​குத் திரைப்​படத்​தில் முதன்​முதலில் பாடி​னார்.

13-வது வயதில் ‘வளை​யாப​தி’, ‘கல்​யாணி’ போன்ற படங்​களில் முன்னணிக் கதாபாத்திரங்​களுக்​குக் குரல் கொடுத்​தார். 1955-ம் ஆண்டு வெளி​யான ‘குலேப​காவலி’ படத்​தில் இடம்​பெற்ற ‘ஆசையும் என் நேச​மும்’ பாடல் இவருக்​குப் பெரும் வெற்றியைத் தேடித் தந்​தது.

பின்​னர் தென்​னிந்​திய சினி​மா​வின் முன்​னணி இசையமைப்​பாளர்​களான ஜி. ராம​நாதன், கே.வி.மகாதேவன், எஸ்​.தட்​சிணா​மூர்த்​தி, வேதா, டி.சலபதிராவ், லிங்​கப்​பா, விஸ்​வ​நாதன்​–​ராமமூர்த்​தி, மாஸ்​டர் வேணு, ஆர்​.சுதர்​சனம், ஜி.கே. வெங்​கடேஷ், வி.குமார், கண்​ட​சாலா, எஸ்​.எம். சுப்​பையா நாயுடு, இளைய​ராஜா உள்பட பல்​வேறு இசை அமைப்​பாளர்​கள் இசை​யில் பல ஹிட் பாடல்​களைப் பாடி​யுள்​ளார்.

‘உத்​தமபுத்​திரன்’ படத்​தில், யாரடி நீ மோகினி, ‘பலே பாண்டி​யா’ படத்​தில் அத்​திக்​காய் காய் காய், ‘மரகதம்’ படத்​தில் சந்​திர​பாபுவுடன் ‘குங்​குமப் பூவே கொஞ்​சும் புறாவே’, ‘பாசமலர்’ படத்தில் பாட்​டொன்று கேட்​டேன் பரவச​மானேன், ‘கு​முதம்’ படத்​தில் மாமா மாமா மாமா, ‘தெய்​வப்​பிற​வி’ படத்​தில் காளை வயசு கட்​டான சைசு, ‘மாலை​யிட்ட மங்​கை’ படத்​தில் ‘செந்​தமிழ் தேன் மொழியாள், ‘நாடோடி மன்​னன்’ படத்​தில் தடுக்​காதே என்னைத் தடுக்​காதே, ‘இரு​கோடு​கள்’ படத்​தில் புன்​னகை மன்​னன் பூவிழி கண்​ணன் உள்பட ஏராள​மான ஹிட் பாடல்​களைப் பாடியிருக்கிறார் ஜமுனா ராணி.

1950 மற்​றும் 1960-களில் முன்​னணி பாடகி​யாக இருந்த அவர், 1970-களில் குறைந்த அளவிலேயே பாடல்​களைப் பாடி​னார். நீண்ட இடைவெளிக்​குப் பிறகு, ‘நாயகன்’ (1987) படத்​தில் இளை​ய​ராஜா இசை​யில், ‘நான் சிரித்​தால் தீபாவளி’ பாடலை பாடி​னார். டி.எம்​.சவுந்​தர​ராஜன், ஏ.எம்​.ராஜா, சீர்​காழி கோவிந்​த​ராஜன், ஏ.எல்​.​ராகவன், பி.பி.ஸ்ரீனிவாஸ், சந்​திர​பாபு, பி.சுசீலா, பி.லீலா, எல்.ஆர்.ஈஸ்​வரி உள்பட பலருடன் இணைந்து பல பாடல்களைப் பாடி​யுள்​ளார்.

தமிழ், தெலுங்​கு, கன்​னடம், மலை​யாளம், சிங்​களம் ஆகிய மொழிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்​பட்ட பாடல்களைப் பாடி இருக்​கிறார்.

தமிழ்​நாடு அரசின் கலை​மாமணி விருது உள்பட பல்​வேறு விருதுகளைப் பெற்​றுள்ள ஜமுனா ராணி, திரு​மணம் செய்து​கொள்​ளாமல் பெங்​களூரு​வில் வசித்து வந்​தார்.

வயது முதிர்வு காரண​மாக அவர் நேற்று முன் தினம் காலமா​னார். அவரது மறைவு தென்​னிந்​திய இசை உலகிலும், திரை​யுல​கிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்​ளது. மறைந்த ஜமுனா ராணி​யின் இறுதிச் சடங்​கு​கள் பெங்​களூரு​வில் உள்ள கள்​ளஹள்​ளி​யில் நேற்று நடை​பெற்​றன. அவரது மறைவுக்​குத் திரையுலகினரும் இசை ரசிகர்​களும் சமூக வலை​தளங்​களில் தங்களது இரங்கலைத் தெரி​வித்து உள்ளனர்.

புகழஞ்சலி | ‘நான் சிரித்தால் தீபாவளி’ உள்பட பல ஹிட் பாடல்களை பாடியவர் ஜமுனா ராணி!
காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவில் ‘ஜனநாயகன்’ திரையிடல் நிறுத்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in