

ஹைதராபாத்: ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான ‘பெத்தி’ திரைப்படம், தற்போது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
புச்சி பாபு சனா இயக்கியுள்ள ’பெத்தி’ படத்தில் நாயகியாக நடித்துள்ள ஜான்வி கபூரின் ‘அச்சியம்மா’ என்ற கதாபாத்திரம், மிக மோசமான முறையில் அளவுக்கு மீறிய ஆபாசத்துடனும், வெறும் கவர்ச்சி பொருளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கதாநாயகிக்கு கதையில் எந்தவித முக்கியத்துவமும் தராமல், அவரை வெறும் கவர்ச்சிக்குரிய ஒரு பொருளாக மட்டுமே காட்டியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, படத்தில் ஒரு காட்சியில் நாயகன் ராம் சரண், ஜான்வியின் கண்கள் மற்றும் உதடுகளின் அழகை பாராட்டிப் பேசும் போது, கேமரா அவரை மிக ஆபாசமாக காண்பிப்பதாக நெட்டிசன்கள் சாடியுள்ளனர்.
"கண்களுக்கும் இடுப்புக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு எடிட்டரும் இயக்குநரும் அறிவில்லாமல் இருக்கிறார்களா?" என்று எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், தேர்தல் பிரச்சாரக் களம் ஒன்றில் வில்லன் ஆட்களால் ஜான்வி கபூரின் ஆடைகள் பொதுவெளியில் களையப்பட்டு அவமானப்படுத்தப்படும் காட்சியும், அதைத் தொடர்ந்து வரும் சண்டைக் காட்சியும் அநாகரிகத்தின் உச்சம் எனப் பலரும் விமர்சித்துள்ளனர்.
இந்த சர்ச்சை ஒருபுறமிருக்க, இத்தகைய மோசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காக ஜான்வி கபூர் மீதும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு முன்பு தெலுங்கில் வெளியான ‘தேவரா’ படத்திலும் கிட்டத்தட்ட இதே போன்ற கதாபாத்தில்தான் அவர் நடித்திருந்தார்.
இதற்கிடையே, இந்த சர்ச்சை குறித்து ஜான்வி கபூர் முன்பு அளித்த நேர்காணல் ஒன்றின் பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், "திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு உடன்பாடு உண்டு; ஆனால், அது எனது அனுமதியோடு மட்டுமே நடக்க வேண்டும். நம் அனுமதியின்றி நம்மை வெறும் கவர்ச்சிப் பொருளாக சித்தரிப்பதை எந்த வடிவத்திலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அது என்னை மிகவும் காயப்படுத்தும்" என்று அவர் பேசியிருந்தார்.