

ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ‘பிக் பிட்ச்சர்’ என்ற பான் இந்தியா ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது.
சமூக வலைதள திரைப்பட விமர்சகர்கள் அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில் ‘இவ்வளவு காலம் படங்களை விமர்சனம் செய்தீர்கள், இப்போது ஒரு படத்தை உருவாக்கிப் பாருங்கள்’ என்ற சவாலை இந்த நிகழ்ச்சி முன்வைக்கிறது. கேமென் ஸ்போர்ட்ஸ் அண்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்நிகழ்ச்சி 15 வாரங்கள் ஒளிபரப்பாகும்.
இதில் பார்வையாளர்களே எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களாக மாறுவார்கள். பார்வையாளர்களின் கருத்து மற்றும் திரைப்பட உருவாக்கத்தின் கடினமான உண்மை ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளியை நிரப்புவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். இறுதி எபிசோடில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்ட பின், அவர்கள் இணைந்து பான்-இந்தியா திரைப்படத்தை உருவாக்குவார்கள். அப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும்.
இந்நிகழ்ச்சியைத் தமிழில் பரத், மலையாளத்தில் இந்திரஜித் சுகுமாரன், தெலுங்கில் நவ்தீப், கன்னடத்தில் வசிஷ்டா என். சிம்ஹா, இந்தியில் விஜய் ராஸ் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். ஆர்வமுள்ள எழுத்தாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் விண்ணப்பங்களை http://www.bigpitchure.in மூலம் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.