

அஸ்வின் குமார் இயக்கத்தில் உருவான அனிமேஷன் திரைப்படம்,‘மகா அவதார் நரசிம்மா’. இந்தப் படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இதையடுத்து மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களை விவரிக்கும் வகையில், மகா அவதார் சினிமாடிக் யுனிவர்ஸை ஹோம்பாளே பிலிம்ஸ் அறிவித்தது.
கே.ஜி.எஃப். காந்தாரா, சலார் போன்ற மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்த நிறுவனம் இது. அதன்படி இந்நிறுவனம் 10 அவதாரங்களில் 2-வது அவதாரமாக ‘மகா அவதார் பரசுராம்’ படம் பற்றி அறிவித்திருந்தது.
அஸ்வின் குமார் இயக்கும் இப்படம், க்ளீம் புரொடக் ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது. இதன் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் 2027-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
“அனிமேஷனை அடிப்படையாகக் கொண்ட இந்த சினிமா பயணம், நவீன தொழில் நுட்பத்தையும் நமது பண்பாட்டு வேர்களின் செழுமையையும் இணைத்து, விஷ்ணு அவதாரங்களின் கதைகளை உயிர்ப்புடன் சொல்லுவதாக இருக்கும். இது பிரம்மாண்டமான மற்றும் முழுமையான காட்சி அனுபவத்தை வழங்கும்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.