

ஆக்ஷன் படங்களுக்கு இந்தியாவில், குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் பஞ்சமே இல்லை. வெளியாகும் 10 படங்களில் 8 படங்கள் ஆக்ஷன் படங்கள்தான் என்னும் சூழலில் அதில் பெண்களை மையப்படுத்தும் படங்கள் என்பதும் அரிதினும் அரிது.
ஒருகாலத்தில் விஜயசாந்தி போன்றோர் ஆக்ஷன் படங்களில் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், அதன் பிறகு பெண்களை மையப்படுத்திய ஆக்ஷன் படங்கள் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாகவே வெளியாகி வருகின்றன. அந்தக் குறையை தீர்க்கும் வகையில் வெளியாகியுள்ள படம்தான் ‘மா இண்டி பங்காரம்’. தமிழில் இப்படம் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
சுவர்ணா (சமந்தா) மற்றும் அவளது கணவர் அனிருத் (திகந்த் மஞ்சலே) இருவரும், அனிருத்தின் தங்கையின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக அவர்களது கிராமத்து வீட்டுக்கு வருகிறார்கள். பெற்றோரின் விருப்பத்தை மீறி திருமணம் செய்துகொண்டதால், மூன்று வருடங்களாக பிரிந்திருந்த குடும்பத்தை இவர்கள் முதன்முறையாக சந்திக்கிறார்கள். எப்படியாவது அந்த கூட்டுக் குடும்பத்தின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக, சுவர்ணா தனக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் இறக்கி குடும்பத்தினரை கவர முயற்சிக்கிறார்.
ஆனால், சுவர்ணாவுக்கு சமைக்கத் தெரியாது, பூஜையின் போது ஸ்லோகங்கள் சொல்லத் தெரியாது. ஆனால், அவர் மிகவும் புத்திசாலி. தனக்கு சமைக்கத் தெரியாததால், யாருக்கும் தெரியாமல் உதவிக்கு ஆள் வைத்து சமைத்த உணவை தான் சமைத்தது போல் குடும்பத்தினரிடம் காட்டி அப்ளாஸ் வாங்குகிறார். எல்லாம் சுமுகமாக போய்க்கொண்டிருக்கும் வேளையில், சுவர்ணாவின் கடந்த காலப் பகை அவரை தேடி வருகிறது. தன் குடும்பத்தைக் காப்பாற்ற அவர் தனது பயத்தை எதிர்கொள்வதோடு, சில முடிவுகளை எடுக்கிறார். இதன் பிறகு என்னவாகிறது என்பதே மீதிக் கதை.
இப்படத்தின் விளம்பர நிகழ்வு ஒன்றில், இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இப்படத்தை ரஜினி நடித்த ‘பாட்ஷா’ படத்தோடு ஒப்பிட்டுப் பேசினார். படம் பார்க்கும்போது அதன் காரணம் புரிகிறது. இரண்டு படங்களுக்கும் இடையே பல ஒற்றுமைகளை காண முடிகிறது. தன்னுடைய கடந்த கால வாழ்க்கையில் இருந்து விலகி அமைதியாக நாயகி, ஒரு கட்டத்தில் எதிரிகளிடம் இருந்து குடும்பத்தை காக்க விஸ்வரூபம் எடுப்பது என ’பாட்ஷா’ பாணியிலேயே இக்கதையும் பயணிக்கிறது.
நீண்ட காலமாகவே கமர்ஷியல், மாஸ் சினிமாக்கள் என்றாலே ஆண்களை மட்டுமே மையப்படுத்தி, அவர்களையே மீட்பர்களாக காட்டி வந்தன. ஆனால், அதற்கு நேர்மாறாக ஒரு பெண்ணை மையமாக வைத்து, அவளது குடும்ப வாழ்க்கையையும், அதே நேரத்தில் வில்லனிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களையும் அவள் மிக எளிதாகக் கையாளுவதைக் காட்டியிருப்பது சிறப்பு.
’ஃபேமிலி மேன்’ தொடரின் இயக்குநர்களில் ஒருவரும், சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமோரு எழுதியுள்ள இந்த கதை அடுத்து என்ன நடக்கும் என்று எளிதில் கணிக்கக்கூடிய வகையில், பெரியளவில் புத்திசாலித்தனங்கள் எதுவும் இல்லை என்றாலும், சமந்தாவுக்கு எழுதப்பட்ட ஆக்ஷன் காட்சிகளும், அவரது நடிப்பும் அதை தாங்கிப் பிடிக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு என்ட்ரி கொடுத்தாலும் நகைச்சுவை, எமோஷனல் காட்சிகள், குறிப்பாக ஆக்ஷன் என அனைத்திலும் தூள் கிளப்பியுள்ளார். சண்டைக் காட்சிகள் வியக்க வைக்கின்றன.
முதல் பாதியில் குடும்பத்துக்குள் நிகழும் சின்னச் சின்ன ஈகோ மோதல்கள் ஒரு கூட்டுக் குடும்பத்தில் பெண்கள் ஒருவருக்கொருவர் எப்படி தங்களை போட்டியாளர்களாக பார்க்கிறார்கள் என்பதை படம் சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளது.
ஆனால், சமந்தாவின் கதாபாத்திரத்துக்கு அதிக பில்ட்-அப் கொடுக்க நினைத்ததாலோ என்னவோ, படத்தில் வரும் ஆண் கதாபாத்திரங்கள் மிகவும் பலவீனமாக, எளிதில் மறந்துபோகும் வகையில் அமைந்துவிட்டன. மருத்துவரான அவரது கணவர் பாத்திரமாக இருந்தாலும், போலீஸ் அதிகாரியாக வரும் அவரது கொழுந்தன் பாத்திரமாக இருந்தாலும் சமந்தாவின் இமேஜுக்கு முன்னே அவை பெரிதாக எந்த அழுத்தத்தையும் பதிவு செய்யவில்லை.
பொதுவாக தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரங்களை நேர்த்தியாக செய்யும் குல்ஷன் தேவய்யா, இதில் வழக்கமான கமர்ஷியல் வில்லனாகவே சுருங்கிவிடுகிறார். அவருக்கு நடிப்பதற்கான ஸ்கோப் பெரிதாக எங்கும் இல்லை.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் கேமரா ஒரு கிராமத்து அழகையும் இன்னொரு புறம் சமந்தாவின் ஆக்ஷன் காட்சிகளையும் கச்சிதமாக படம் பிடித்துள்ளது. சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை, ஆக்ஷன் காட்சிகளில் பெரிய அளவில் எனர்ஜி கொடுத்துள்ளது.
படம் இரண்டாம் பாதியில் சற்றே நீளமாக இழுப்பது போன்ற உணர்வைத் தருகிறது. முதல் பாதியில் சண்டைக்காக வைக்கப்பட்ட பல பில்ட்-அப் காட்சிகள், இரண்டாம் பாதியில் வரும்போது எதிர்பார்த்த அளவுக்கு பெரிய தாக்கத்தையோ, திருப்தியையோ பார்வையாளர்களுக்குத் தருவதில்லை.
ஜான்சி ஏன் சுவர்ணாவாக மாறினார், வில்லன் ஏன் அவரை கண்டுபிடிப்பதில் இவ்வளவு தீவிரம் காட்டுகிறார் என்பதற்கான காரணங்கள் இன்னும் சிறப்பாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். நாயகியின் பின்னணிக் கதை பார்வையாளர்களை முழுமையாக நம்பவைக்கும்படியோ அல்லது உணர்வுபூர்வமாக ஈர்க்கும்படியோ அமையவில்லை
ஒரு கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள் புதுமையான ஒன்றை முயற்சி செய்ததற்காக இயக்குநரை பாராட்டலாம். வழக்கமாக ஆண் ஹீரோக்களுக்கு எழுதப்படும் ஒரு வலுவான பாத்திரப் படைப்பை ஒரு பெண் நாயகிக்கு கொடுத்திருப்பது ஒரு நல்ல யோசனை. ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்த யோசனை பார்வையாளர்களிடம் முழுமையாக சென்றடைவதற்கு கதையில் தேவையான உணர்வுபூர்வமான ஆழமும் காட்சிகள் இல்லாமல் போனது படத்தின் பெரிய குறை.
'மா இன்டி பங்காாரம்' ஒரு வழக்கமான கதைதான். ஆனால், இத்தனை காலமாக ஆண் ஹீரோக்கள் மட்டுமே குத்தகைக்கு எடுத்திருந்த மாஸ் கமர்ஷியல் ஃபார்முலாவை, சமந்தா தனது அதிரடியான ஆக்ஷன் தனி ஒரு ஆளாக ரசிக்க வைக்கிறார். குறைகள் இருப்பினும் மாஸ் மசாலா படங்களை விரும்புபவர்களுக்கும், சமந்தாவின் ரசிகர்களுக்கும் இது ஒரு கமர்ஷியல் விருந்து.