

நிவின் பாலி - மமிதா பைஜு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் வணிக ரீதியிலான வெற்றிக்காக படக்குழுவினரை அழைத்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் எம்.பி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கிரிஸ் ஏ.டி இயக்கத்தில், நிவின் பாலி, மமிதா பைஜு இணைந்து நடித்திருக்கும் படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. ஆகஸ்ட் 21-ம் தேதி மலையாளத்தில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று, ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தின் வணிக ரீதியிலாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நடிகரும் மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும் படம் தமிழில் வெளியானதற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து படக்குழு தனது எக்ஸ் தள பக்கத்தில் படக்குழுவினருடன் கமல்ஹாசன் உரையாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்து பதிவிட்டுள்ளது. அதில்,‘பெத்லகேம் குடும்ப யூனிட் குழுவிருக்கு சிறப்பான தருணம் இது. உலக நாயகன் கமல்ஹாசன் எங்கள் குழுவினரைச் சந்தித்து படத்தின் மாபெரும் வெற்றிக்காக வாழ்த்துகள் கூறினார்’ என்று தெரிவித்துள்ளது.
‘பிரேமலு’ படத்தின் இணை கதாசிரியர் கிரண் ஜோசியுடன் இணைந்து கிரிஷ் ஏ.டி திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம், அதிக வயது வித்தியாசம் கொண்ட ஆஷ்லி (மமிதா) மற்றும் ஜஸ்டினுக்கும் (நிவின் பாலி) இடையில் உருவாகும் காதலைப் பற்றிப் பேசுகிறது.