

பிரபல நடிகையும் தேவியின் மகளுமான ஜான்வி கபூர், தனது 29-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன் தினம் தனது தோழிகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றார். அலிபிரியில் இருந்து படிகளில் நடந்தே சென்ற அவர் நேற்று காலை திருமலைக்குச் சென்றார்.
பின்னர் ஏழுமலையானைத் தரிசனம் செய்தார். 3,500 படிகளுக்கு மேல் ஏறி கோயிலுக்குச் சென்ற அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகள் செய்து, ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.
திருப்பதி கோயிலில் ‘காந்தாரா 2’ பட நடிகை ருக்மணி வசந்தும் ஜான்வி கபூருடன் வழிபட்டார். அவர்களுடன் ரசிகர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி யுள்ளது. நடிகை ஜான்வி இப்போது, ‘பெத்தி’ என்ற படத்தில் ராம் சரண் ஜோடியாக நடித்துள்ளார். புச்சி பாபு சனா இயக்கியுள்ள இப்படம் ஏப்.30-ல் வெளியாக இருக்கிறது.