

ஈரானின் 'ஐரிஸ் புஷேர்' போர்க் கப்பலிருந்து மீட்கப்படும் வீரர்கள்.
ராமேசுவரம்: அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றமான சூழலில், ஈரானுக்கு சொந்தமான 2-வது போர் கப்பலான ‘ஐரிஸ் புஷேர்’-ல் இருந்து 208 ஈரான் நாட்டு வீரர்களை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகே கூறும்போது, இது மனிதாபிமான நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.
ஐஆர்ஐஎஸ் டேனா இந்தியாவில் கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டு, ஈரான் திரும்பிய ஐஆர்ஐஎஸ் டேனா என்ற போர்க் கப்பலை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மார்க்-48 என்ற சக்தி வாய்ந்த டார்பிடோ குண்டு மூலம் கடந்த சனிக்கிழமை தகர்த்தது.
இதில் 87 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரான் போர்க் கப்பல் ஐஆர்ஐஎஸ் டேனாவில் இருந்து, அவசர உதவி கோரி கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது.
இலங்கையின் காலே பகுதியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் ஈரான் போர்க்கப்பல் கடலில் மூழ்கியது. இது இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதி ஆகும்.
இதுகுறித்து இலங்கைக்கு தகவல் கிடைத்ததும் அந்நாட்டு கடற்படையும், விமானப் படையும் உடனடியாக மீட்புப் பணியில் களமிறங்கின. இதில் 32 பேரை உயிருடன் மீட்டதுடன், 84 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.
இந்நிலையில் ஈரானின் 2-வது போர்க் கப்பலான ‘ஐரிஸ் புஷேர்’, 200-க்கும் மேற்பட்ட வீரர்களுடன், இலங்கை கடற்பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பல் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றமான சூழலில், போர்க் கப்பலை பாதுகாப்பாக இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசிடம் ஈரான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகே உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ‘ஐரிஸ் புஷேர்’ போர்க் கப்பல் கிழக்கு திரிகோணமலை துறைமுகத்துக்கு திருப்பிவிடப்பட்டு, அதில் இருந்த 208 வீரர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு, தலைநகர் கொழும்பு நகருக்கு அழைத்து வந்தனர்.
இந்தக் கப்பலில், 53 அதிகாரிகள், 84 கேடட்கள், 48 மூத்த கடற்படை வீரர்கள் மற்றும் 23 கடற்படை வீரர்கள் என 208 பேர் இருந்ததாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும், கப்பலில் மீட்கப்பட்ட 208 ஈரானிய கடற்படையினர் வெலிசற கடற்படை முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகே கூறும்போது, 2 ஈரான் நாட்டுக் போர்க் கப்பல்கள் தொடர்பான பிரச்சினையில் நாம் நடுநிலையையே பின்பற்றியுள்ளோம். மனிதாபிமானத்துக்கு முதன்மை அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.