

விஜய் தேவரகொண்டா இப்போது ‘ரணபாலி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
வரலாற்று பின்னணியில் உருவாகும் இப்படத்தை அடுத்து அவர் நடிக்கும் படத்தை ‘ஹாய் நன்னா’வை இயக்கிய சவுர்யுவ் இயக்குகிறார். வைரா நிறுவனம் சார்பில் டாக்டர் வியேந்தர் ரெட்டி தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சர்வதேச கலைஞர்கள் சிலர் பணியாற்றுகின்றனர்.
‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’, ‘ஃபால் அவுட்’ போன்ற உலகளாவிய படைப்புகளுக்காக அறியப்படும் அலெக்சாண்டர் மார்ட்டினஸ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘காட்ஸ் ஆஃப் எகிப்து’, ‘பேட்மேன் பார் எவர் ‘ஸ்னோபிர்சர் போன்ற படங்களின் பின்னணியில் செயல்பட்ட எரிக் டர்ஸ்ட் இதன் விஎஃப்எக்ஸ் பணிகளைக் கவனிக்கிறார். ஹேஷம் அப்துல் வஹாப் இசை அமைக்கிறார்.
இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் விஜய் தேவரகொண்டா நாய்களைப் பிடித்தபடி செல்கிறார். இயக்குநர் குதிரையைப் பிடித்தபடியும் மற்றவர்கள் ஆயுதங்களைத் தாங்கியபடியும் செல்கின்றனர். “இந்த எல்லா கோபமும் ஒருகாலத்தில் அன்பாக இருந்தது” என்று டேக் லைன் வைத்துள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் பரவி வருகிறது.