

நிவின் பாலி- மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள மலையாளத் திரைப்படம், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ள இப்படத்தை திலீஷ் போத்தன், ஃபஹத் பாசில், ஷ்யாம் புஷ்கரன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதில் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ரோஷன் ஷனவாஸ், ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ள இப்படத்துக்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையாளத்தில் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் தமிழில் வெளியாக இருக்கிறது.
“நடுத்தர வயது ஆணுக்கும், கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே உருவாகும் காதலின் பல்வேறு முகங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. வயது வித்தியாசம் கொண்ட இருவருக்கு இடையேயான ஈர்ப்பு, காதல், அதனால் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் சமூகத்தைச் சுற்றிய பார்வையை கொண்ட இப்படம் செப்.4-ல் வெளியாகிறது. பிரிமார்க் புரொடக் ஷன்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இதை வெளியிடுகிறது” எனப் படக்குழு தெரிவித்துள்ளது.