

நடிகை ஸ்வேதா மேனன்
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான ‘அம்மா’வுக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஸ்வேதா மேனன் தலைவரானார்.
‘அம்மா’வின் வரலாற்றில் அதன் முதல் பெண் தலைவராக அவர் பொறுப்பேற்றார். இந்நிலையில் இச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 21-ம் தேதி நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தலைவர் ஸ்வேதா மேனன், பொதுச் செயலாளர் குக்கு பரமேசுவரன் உள்பட 17 நிர்வாகிகள், தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
இதையடுத்து ரமேஷ் பிஷாரோடி எம்.எல்.ஏ தலைமையில் தற்காலிகக் குழு (அட்-ஹாக் கமிட்டி) அமைக்கப்பட்டது. இந்நிலையில் ‘அம்மா’வின் தலைவர் பதவியிலிருந்து விலகவில்லை என்று திடீரென அறிவித்த ஸ்வேதா மேனன், தற்காலிகக் குழு பற்றி கேள்விகளை எழுப்பினார்.
“தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு ராஜினாமா செய்தாலும், அடுத்த தேர்தல் நடந்து புதிய குழு பொறுப்பேற்கும் வரை, ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பழைய குழுவே, பதவியில் நீடிக்க வேண்டும். சங்க விதிகளின்படி, ஒரே நேரத்தில் ஒரு குழு மட்டுமே செயல்பட முடியும். எனவே, தற்போதைய தற்காலிகக் குழுவுக்கு எந்தவித சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லை. அவர்கள் ‘அம்மா’ உறுப்பினர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்” என்று கூறினார்.
பின்னர் ‘அட்- ஹாக்’ கமிட்டிக்கு எதிராக எர்ணாகுளம் முன்சீஃப் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம் அக்கமிட்டியின் செயல்பாடுகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனால், ரமேஷ் பிஷாரோடி ராஜினாமா செய்தார்.
இதுபற்றி ஸ்வேதா, “அம்மா அமைப்புக்குள் இருந்த உட்கட்சிப் பூசல்களைப் பயன்படுத்திச் சிலர் அமைப்பைக் கைப்பற்ற முயன்றனர். ஆனால் நீதிமன்றம் அந்த முயற்சியைத் தடுத்துள்ளது. ராஜினாமா செய்யாமல் உறுதியாக இருந்து போராட்டத்தைத் தொடருமாறு கூறிய மூத்த நடிகர்களான மம்மூட்டி, மோகன் லால் ஆகியோருக்கு எனது நன்றி.
திடீரென உள்ளே நுழைந்த 10 அல்லது 15 பேர் ‘அம்மா’வின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கக் கூடாது. பெரும்பான்மையான உறுப்பினர்களே அதைத் தீர்மானிக்க வேண்டும். குழுவில் உண்மையாகவே இடம்பெற விரும்புவோர், பின்பக்க வழியாக நுழைவதற்குப் பதிலாக, தேர்தலில் போட்டியிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.