

இந்தி நடிகையான டெய்சி ஷா, தமிழில் ஜீவாவின் ‘பொறி’, அருண் விஜய்யின் ‘மலை மலை’ படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் தென்னிந்திய இயக்குநர் ஒருவரால் தனக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘எனது திரை வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் தென்னிந்திய இயக்குநர் ஒருவர் நடிகையைத் தேர்வு செய்வதற்காக மும்பை வந்திருந்தார். அவரைச் சந்திக்க ஆறு முதல் ஏழு பெண்கள் சென்றிருந்தோம். அவர் ஒவ்வொருவரையும் தனித் தனியாகச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். என்னிடம் பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென என் கையைப் பிடித்துக் கொண்டது எனக்குப் பிடிக்கவில்லை.
மற்றவர்கள் என்னைத் தொடுவது குறித்து எப்போதும் ஒருவித அச்சம் உண்டு. நான் மசாஜ் செய்து கொள்ளாததற்கு காரணமே, மற்றவர்கள் என்னைத் தொடுவது பிடிக்காது என்பதால்தான். அதனால் அந்தச் சம்பவம் எனக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியது. நான் அவரிடம், ‘உங்களை பிறகு தொடர்பு கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.
பிறகு அவரை ஒருபோதும் தொடர்புகொள்ளவே இல்லை” என்றார். அவரிடம் அந்த இயக்குநரின் பெயரைக் கேட்டபோது அதை சொல்ல மறுத்துவிட்டார்.