
மலையாள ஹீரோவாக அறியப்பட்டாலும் தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லை விரித்து வருகிறார் துல்கர் சல்மான். தெலுங்கில் அவர் நடித்த ‘சீதாராமம்’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்கள் ஹிட்டானதை அடுத்து அங்கும் அவருக்கு வரவேற்பு. அடுத்து அவர் நடித்துள்ள, ‘ஆகாசம்லோ ஒக தாரா’ (ஆகாயத்தில் ஒரு நட்சத்திரம்) நவ.20-ல் வெளியாகிறது. தெலுங்கில் உருவானாலும் தமிழ், இந்தி, மலையாளம் உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது. இதன் இயக்குநர் பவன் சதினேனியிடம் பேசினோம்.
தலைப்பே கவிதையா இருக்கே...
“இது கனவுகளைப் பற்றிய படம். நல்லா படிக்கிற ஒரு கிராமத்துக்கு பெண்ணுக்கு விண்வெளி வீராங்கனை ஆகணும்னு ஆசை. அந்த லட்சியத்தை அடைய போராடுற அவள், அதை அடைஞ்சாளா, இல்லையாங்கறது கதை. அவள் வாழ்க்கையில யார் யாரெல்லாம் வர்றாங்க, யார் அவருக்கு ஆதரவளிக்கிறாங்கன்னு திரைக்கதை போகும்.
கூடவே அழகான காதலும் இருக்கு. கிராமத்து பெண் கல்பனாவா சாத்விகா நடிச்சிருக்காங்க. நாயகன் கிருஷ்ணாவா துல்கர் சல்மான் நடிச்சிருக்கார். இது ‘ஃபீல் குட்’ படம். ஹாலிவுட்டுல, வில் ஸ்மித் நடிச்ச ‘பெர்சூட் ஆஃப் ஹாப்பினஸ்’ (Pursuit of Happiness) போன்ற படங்களைப் பார்க்கும் போது எப்படி உணர்வீங்களோ, அதே போன்ற உணர்வை இந்தப் படம் கொடுக்கும்.
துல்கர் சல்மானை இந்தப் படத்துக்கு தேர்வு பண்ணினது ஏன்?
நான் கதை எழுதும்போதே துல்கரை மனசுல வச்சுதான் எழுதினேன். இந்தக் கதைக்கு சரியான முறையில ‘பெர்பார்ம்’ பண்ணக் கூடிய ஒரு நடிகர் தேவைப்பட்டார். அப்புறம் கதைப்படி நாயகியோட கனவுக்காக நாயகன் எதையாவது செய்யும்போது பார்வையாளர்களுக்கு நம்பகத் தன்மை வரணும். துல்கர்கிட்ட அது இருப்பதா நான் உணர்ந்தேன். அதனால அவர்தான் சரியான சாய்ஸ்னு முடிவு பண்ணினேன்.
கதை கேட்டதுமே நடிக்கிறேன்னு சொல்லிட்டாரா?
அவருக்கு கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. கேட்டு முடிச்சதும் இது சொல்லப்பட வேண்டிய கதைன்னு சொன்னார். உடனடியா பண்ணலாம்னு சொல்லிட்டார். அவர் ஏற்கெனவே சில படங்கள்ல நடிச்சிட்டு இருந்ததால கால்ஷீட்டை சரி பண்ணிட்டு சொல்றேன்னார். அந்தப் படங்கள் முடிஞ்சதும் இதுக்கு வந்தார். இந்தக் கதையில அவ்வளவு சரியா பொருந்தியிருக்கார். படம் வெளியானதும் பார்வையாளர்கள் அதை உணர்வாங்க.
படத்துல 3 கதாநாயகிகள் இருக்காங்களே...
இந்தக் கதைக்கு தேவைப்பட்டாங்க. சாத்விகா, ஸ்ருதி ஹாசன், ருஹானி சர்மா நடிச்சிருக்காங்க. கூட சுவாசிகாவும் இருக்காங்க. ஹீரோ, ஹீரோயின் அப்படிங்கறதைத் தாண்டி படத்துல எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும். இதுபோன்ற படங்கள்ல கதாபாத்திரங்கள்தான் ரொம்ப முக்கியம். எல்லோருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்காங்க. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைச்சிருக்கார். சொல்லவே வேண்டாம், பாடல்கள், பின்னணி இசை ரெண்டையும் அருமையா பண்ணியிருக்கார். படத்துக்கு அவர் பெரிய பலம்.
இது ‘பான் இந்தியா’ ரிலீஸ் படம்... மற்ற மொழி ஆடியன்ஸ் கதையோட ஒன்றுவதற்கு படத்துல என்ன இருக்கு?
இது ‘யுனிவர்சல் ஸ்டோரி’யை கொண்ட படம். எல்லோருக்குமே கனவுகள் இருக்கும், லட்சியம் இருக்கும். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் அவங்கவங்களுக்கான ஆசைகள், கனவுகள் இருக்கு. அப்படியொரு கனவை, லட்சியத்தைப் பேசற கதைங்கறதால, இது மொழி தாண்டிய திரைப்படம். அதனால பான் இந்தியா ரிலீஸுக்கு இதைவிட சிறந்த கதை இருக்க முடியாது.
இன்றைய காலகட்டத்துல இயக்குநர்கள் மற்ற மொழி ஹீரோக்களோட ஒர்க் பண்றது அதிகரிச்சிருக்கே?
உண்மைதான். கரோனாவுக்கு பிறகு சினிமாவுக்கு எல்லைகள்னு எதுவும் இல்லை. எல்லா மொழி படங்களையும் பார்வையாளர்கள் பார்க்கிறாங்க. மொழி தாண்டி நடிகர்களின் முகங்கள் எல்லாருக்கும் பரிச்சயமாகி இருக்கு. தெலுங்கு, தமிழ், கன்னட இயக்குநர்கள், நடிகர்கள்னு இப்ப எதுவும் இல்லை. பிற மொழி நடிகர்கள் அப்படிங்கறதை தாண்டி வெறும் நடிகர்கள், இயக்குநர்கள் அப்படிங்கறது நிலைச்சிடுச்சு. நல்ல கதைகளுக்குத் தான் இப்ப முக்கியத்துவம் இருக்கு. இது நல்ல மாற்றம்.
தமிழ்ல வாய்ப்பு கிடைச்சா எந்த ஹீரோவை இயக்க ஆசை?
விஜய் சார் படங்களை ரொம்ப விரும்புவேன். அஜித், சூர்யா, தனுஷ் உள்பட எல்லோருமே எனக்கு பிடிக்கும். விஜய் சாருடன் இப்போதைக்கு படம் பண்ண வாய்ப்பில்லை. அஜித், சூர்யா சாரோட மிகப்பெரிய ரசிகன் நான். அவங்களை இயக்கும் வாய்ப்பு கிடைச்சா பெருமையா இருக்கும்.