
தமிழில் வெறும் மூன்று படங்கள்தான் நடித்திருக்கிறார் அனிஷ்மா அனில்குமார். மூன்றும் ஹிட்டானதில் அதிக உற்சாகம் அவருக்கு. ‘சிறை’ கலையரசியும் ‘யூத்’ கனகவல்லியும் ‘மொத ராத்திரி’ முத்துச்செல்வியும் கதாபாத்திரங்களாக வேறென்றாலும் தனது நடிப்பால் மூன்றுக்கும் அழகாக உயிர் கொடுத்திருக்கிறார் அனிஷ்மா.
“ஒரு நடிகைக்கு தொடர்ந்து ஹிட் கிடைக்கிறது பெரிய விஷயம். அது எனக்கு கிடைச்சதுல மகிழ்ச்சி. மூன்று படங்கள்லயும் நல்ல கதையில நடிக்க முடிஞ்சது. நல்ல டீம் கூட ஒர்க் பண்ண முடிஞ்சது. இது தொடரணும்னு நினைக்கிறேன்” என்கிறார் அனிஷ்மா.
தாய்மொழி மலையாளம்னாலும் நல்லா தமிழ்ப் பேசறீங்களே?
படிக்கும்போது நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்பேன். அப்படிப் பார்த்துக் கத்துக்கிட்டதுதான். நித்யா மேனன், ஊர்வசி, ரேவதி, நயன்தாரா இவங்களோட நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களை மாதிரி சிறந்த நடிகையாகணும்னு அதிக ஆசை இருந்துச்சு. ஆனா உடனே நடிக்க வாய்ப்பு கிடைக்கும்னு நினைக்கலை.
எங்க வீட்டுலயும் என்னோட நடிப்பு ஆசைக்கு அதிக ஆர்வம் காட்டலை. அப்புறம் ஒரு மாதிரி குடும்பத்தைச் சமாளிச்சு, மலையாளத்துல நடிக்க ஆரம்பிச்சேன். பிறகுதான் நான் அதுல தீவிரமா இருக்கேன்னு அவங்களுக்குப் புரிஞ்சது. பிறகு எனக்கு ஆதரவா செயல்பட ஆரம்பிச்சாங்க.
தமிழ் சினிமா வாய்ப்பு கிடைச்சது எப்படி?
மலையாளத்துல நஸ்லெனும் நானும் நடிச்ச ‘ஐ அம் காதலன்’ படத்தைப் பார்த்துட்டு, ‘சிறை’ ஆடிஷனுக்கு கூப்பிட்டாங்க. கேரளாவுல இருந்து சென்னை வந்து ஆடிஷன்ல கலந்துகிட்டேன். இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமா இருந்ததா ஆடிஷன் பண்ணும் போது சொன்னார்.
அப்புறம்தான் அந்த வாய்ப்பு கிடைச்சது. எனக்கு தமிழ்ல நடிக்கணும்னு பேராசை இருந்துச்சு. அது என்னைக்காவது நிறைவேறும்னு நினைச்சேன். ஆனா, ‘சிறை’ மூலம் இவ்வளவு சீக்கிரமா நிறைவேறும்னு நினைக்கலை. ‘சிறை’ ஹிட்டானதும் இன்னும் சந்தோஷத்தைக் கொடுத்தது.
நடிப்புக் கத்துக்கிட்டுதான் சினிமாவுக்கு வந்தீங்களா?
இல்லை. நடிக்க வரும்போது வெறும் ஆசை மட்டும்தான் இருந்துச்சு, வாய்ப்பு கிடைக்கும்னு கூட நினைக்கலை. இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும்னு எதிர்பார்க்கலை. அதனால நடிப்புக்கு பயிற்சி எதுவும் எடுத்துக்கல. ஸ்பாட்ல பார்த்துக் கத்துக்கிட்டதுதான். கதை கேட்கும்போதே, அந்த கதாபாத்திரமா என்னை நினைச்சுக்குவேன். ஷூட்டிங் ஸ்பாட் வந்ததும் இயக்குநர் என்ன எதிர்பார்க் கிறார், அவர் எப்படிச் சொல்றாரோ, அப்படித்தான் நடிக்கிறேன். இதுவும் ஒரு கற்றல் முறைதான். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புல ஏதாவது புது விஷயத்தைக் கத்துட்டுதான் இருக்கேன்.
கதைகளை எப்படி தேர்வு பண்ணுறீங்க?
கதை கேட்கும்போதே இது சரியான கதையா, இல்லையான்னு புரிஞ்சிரும். மனசுக்குள்ள ஒரு விஷூவல் ஓடும். இந்த கதாபாத்திரத்துக்கு நான் சரியா பொருந்துவேனா, அதுல நடிக்க என்ன ஸ்கோப் இருக்குன்னு பார்ப்பேன். சில நேரம் இந்தக் கதையை மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு தோணும். அப்படி தோணுச்சுன்னா, உடனே ஓகே சொல்லிருவேன். சில படங்களைப் பார்க்கும்போது, இந்த கேரக்டர்ல நான் நடிச்சிருக்கணும்னு தோணும்.
‘மொத ராத்திரி’ படத்துக்கு பிறகு உங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கு?
‘சிறை’, ‘யூத்’ படங்களுக்குப் பிறகு ‘மொத ராத்திரி’ எனக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்திருக்கு. வெளியில எங்காவது யாராவது பார்த்தாங்கன்னா, அடையாளம் கண்டு பேசறாங்க. நிறைய பெண்கள், அந்தக் கதையில வர்ற கேரக்டரை, தங்களோட பொருத்திப் பார்க்க முடிஞ்சதுன்னு சொன்னாங்க.
என் நடிப்பையும் பாராட்டினாங்க. இது எனக்கு புது அனுபவமா இருக்கு. தொடர்ந்து நல்ல கதைகள்ல நடிக்கணும்னு நினைக்கிறேன். அடுத்து ‘மாகாளி’ படத்துல நடிக்கிறேன். இப்ப ஷூட்டிங் பிரேக்ல இருக்கிறேன்.