

உலகம் தன்னுடையது என்ற பேராசையுடன் துப்பாக்கியால் ஆள நினைத்தவன் அதே துப்பாக்கியால் வீழ்த்தப்படுவதே ‘ஸ்கார் ஃபேஸ்’ (SCAR FACE-1932) திரைப்படத்தின் ஒருவரிக் கதை. கேங்ஸ்டர் ‘லூயிஸ் கோஸ்டில்லோ’ தனது பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கும் போது விசிலடித்தபடியே தோன்றும் ஒரு நிழல் உருவம் அவனை சுட்டுக் கொல்கிறது.
முகத்தில் தழும்புடன் இருக்கும் டோனி கமோண்டே தனது தலைவன் ஜானி லோவோவின் உத்தரவுப்படியே இந்தக் கொலையைச் செய்கிறான். போலீஸ் விசாரணைக்கு உள்ளாகும் டோனியை, அவனது வழக்கறிஞர் விடுவிக்கிறார். டோனிக்கு அம்மா, தங்கை செஸ்கா என்று உறவுகள் உண்டு.
செஸ்கா ஆண் நண்பருடன் பழகுவதைக் கண்டிக்கிறான் டோனி. தன் சகாக்களான ஏஞ்சலோ மற்றும் ‘கினோ’ ரினால்டோவுடன் இணைந்து, மது விற்பனை மையங்களை மிரட்டித் தன் வசப்படுத்துகிறான் டோனி. துப்பாக்கிச் சூடு மற்றும் பெட்ரோல் குண்டுகள் மூலம் தெற்குப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். வடக்குப் பகுதியில் கைவரிசை காட்ட வேண்டாம் என்ற ஜானியின் எச்சரிக்கையை மீறி, ஐரிஷ் கேங்ஸ்டர் ஓ’ஹாராவுக்கு ரினால்டோ மூலம் பூக்கடையில் வைத்து மலர் வளையம் அனுப்புகிறான்.
ஓ’ஹாராவின் மறைவுக்குப் பழிவாங்க அவனது வாரிசு டாம் காஃப்னி, துப்பாக்கிகளுடன் தெற்குப்பகுதிக்குள் புகுந்து சூறையாடுகிறான். டோனி அவனுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கிறான். இரு கும்பல்களுக்கு இடையிலான இந்தப் போர் மக்களிடையே பீதியை உண்டாக்குகிறது. இந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என போலீஸ் துறைத் தலைவர் உள்பட மக்கள் உறுதியேற்கிறார்கள்.
டாம் காஃப்னி மற்றும் அவனது ஆட்களை ஒரு ‘பவுலிங்’ அரங்கில் வைத்துத் துவம்சம் செய்கிறான் டோனி. தன்னை மீறி வளரும் டோனியின் ஆதிக்கத்தைக் கண்டு கொதிக்கும் ஜானி லோவோவை, ஓர் இரவு விடுதியில் சந்திக்கும் டோனி, அவனது காதலி ‘பாப்பி’யை அழைத்துத் துணிச்சலாக நடனமாடுகிறான்.
இதனால் ஆத்திரமடையும் லோவோ, கூலிப்படையை ஏவி டோனியைக் கொல்ல முயல்கிறான். அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் டோனி, ரினால்டோவின் உதவியுடன் ஜானி லோவோவின் கதையையே முடித்துவிடுகிறான்.
ஜானியின் வீழ்ச்சிக்குப்பிறகு, நிழல் உலகின் சக்கரவர்த்தியாக உருவெடுத்த டோனி, சட்டம் மற்றும் ஊடகங்களின் பிடியிலிருந்து தப்பிக்கத் தனது காதலி பாப்பியுடன் புளோரிடா செல்கிறான். இதற்கிடையில், அவனது தங்கை செஸ்கா, டோனியின் நம்பிக்கைக்குரிய ரினால்டோவுடன் ரகசியமாகத் தனது காதலை வளர்க்கிறாள்.
ஊர் திரும்பிய டோனி, தனது தங்கை ஒருவனுடன் தங்கியிருப்பதை அறிந்து ஆவேசமடைகிறான். அந்த நபர் தனது சகா ரினால்டோதான் என்று தெரிந்தும், ஆத்திரத்தில் அவனைச் சுட்டுக்கொல்கிறான். அவன் இறந்த பிறகுதான், அவர்கள் இருவரும் ஏற்கெனவே திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் என்ற உண்மை டோனிக்குத் தெரியவருகிறது.
போலீஸ் டோனியைத் தேடி வர, வீட்டில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் உதவியாளர் ஏஞ்சலோ கொல்லப்படுகிறான். தன் கணவனைக் கொன்ற அண்ணனைப் பழிவாங்க நினைக்கும் செஸ்கா, பாசத்தால் தடுமாறி இறுதியில் போலீஸ் குண்டு பாய்ந்து இறக்கிறாள்.
நிலைகுலைந்த டோனி, கண்ணீர் புகைக் குண்டுகளுக்கு மத்தியில் படியிலிருந்து இறங்கி வந்து போலீஸாரிடம் உயிர் பிச்சை கேட்கிறான்; ஆனால் தப்பிக்க முயலும்போது சுட்டுக் கொல்லப்படுகிறான். அவன் வீதியில் பிணமாக விழும் தருணத்தில், மேலே இருக்கும் விளம்பரப் பலகையில் ‘The World Is Yours’ என்ற வாசகம் ஏளனமாக மின்னுகிறது.
துப்பாக்கி முனையில் உலகை ஆள நினைத்தவன், அதே உலகத்தின் காலடியில் மடிகிறான். கேங்ஸ்டர் ‘அல் கபோன்’ வாழ்க்கையைத் தழுவிய அர்மிட்டேஜ் டிரெயிலின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, சினிமா மேதை ஹோவர்ட் ஹாக்ஸ் இயக்கிய காவியமே இந்த ‘ஸ்கார் ஃபேஸ்’ படம் தொடங்கியதும் திரையில் தோன்றும் வாசகங்கள் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் விடுக்கப்படும் நேரடி எச்சரிக்கையாக அமைகின்றன.
இதில் வரும் ஒவ்வொரு சம்பவமும் நிஜ நிகழ்வுகளின் மறுபதிப்பு. ‘இதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று அதிகாரவர்க்கத்தைச் சவுக்கால் அடிக்கிறது இத்திரைப்படம். மதுவிலக்கு காலத்தில் கொடிகட்டிப் பறந்த சட்டவிரோத மது வணிகத்தையும், குண்டர் கலாச்சாரத்தையும் துகிலுரித்துக் காட்டிய இயக்குநர் ஹோவர்ட் ஹாக்ஸ், ‘துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியாலேயே அழிவான்’ என்ற உண்மையைத் திரையில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
பால் முனி (டோனி): நிஜ ரவுடி அல் கபோனின் உடல்மொழியைத் திரையில் கொண்டுவந்த ‘மெத்தட் ஆக்டர்’. கேலி, கிண்டல், சீரியஸ் மற்றும் தங்கை மீதான அதீத பாசம் என அனைத்து உணர்வுகளையும் அனாயசமாக வெளிப்படுத்துகிறார். வின்ஸ் பார்னெட் (ஏஞ்சலோ): டோனியின் செயலாளராக வரும் இவரது கதாபாத்திரம் சிறந்த ‘காமிக் ரிலீஃப்’. குண்டு மழை பொழியும்போதும், “சத்தமா பேசுங்க, கேக்கல” என்று இவர் செய்யும் சேட்டைகள் உச்சகட்ட நகைச்சுவை.
ஜார்ஜ் ராஃப்ட் (கினோ): டோனியின் வலதுகரமாக வரும் இவர், எப்போதும் கையில் நாணயத்தைச் சுண்டிக்கொண்டே இருப்பார். இது பின்னாளில் வந்த பல கேங்க்ஸ்டர் படங்களுக்கு அடையாளமாகவே மாறியது. ஆன் வோராக் (செஸ்கா): டோனியின் தங்கையாக நடித்த இவரது நடிப்பு அந்த காலத்திலேயே துணிச்சலானது. “எனக்கு 18 வயதாகிவிட்டது, என் இஷ்டப்படிதான் நடப்பேன்” என அவர் காட்டும் அந்தச் சுதந்திரமான அணுகுமுறை வியக்க வைத்தது.
ஒளிப்பதிவு (லீ கார்ம்ஸ் மற்றும் எல்.வில்லியம் ஓ’கானல்): நிழல்களின் பயன்பாடு மூலம் மரணத்தைப் பேசும் இவர்களின் ஒளிப்பதிவு மிரட்டலானது. ஒவ்வொரு கொலைக்கும் முன்பு திரையில் தோன்றும் ‘எக்ஸ்’ என்ற குறியீடு, படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் மரணம் சூழ்ந்திருப்பதை உணரவைக்கும் தொழில்நுட்பப் புரட்சி.
எடிட்டிங் (எட்வர்ட் கர்டிஸ்): காலண்டர் தாள்கள் பறக்க, அவற்றின் மீது துப்பாக்கிக் குண்டுகள் துளைப்பது போன்ற காட்சிகள் மூலம், மாதம் முழுவதும் தொடரும் வன்முறையை எளிதாக ரசிகர்களுக்குக் கடத்துகிறார். இவரது எடிட்டிங் இன்றும் வியக்க வைக்கிறது.
தயாரிப்பு (ஹாவர்ட் ஹியூஸ்): புகழ்பெற்ற கோடீஸ்வரரான இவர், தணிக்கை வாரியத்துடன் பல ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி இப்படத்தை திரைக்குக் கொண்டு வந்தார். ‘உலகம் தன்னுடையது’ என்று கனவு காணும் ஒவ்வொரு குற்றவாளியின் இறுதியும் ஒரு தெருவோரப் பிணம்தான் என்பதைத் துணிச்சலாகச் சொன்ன இப்படம், காலத்தால் அழியாத காவியம்.
90 ஆண்டுகளுக்கு முன்பே ஹோவர்ட் ஹாக்ஸ் உருவாக்கிய இந்த வன்முறைச் சித்திரம்தான் இன்றைய நவீன கேங்ஸ்டர் படங்களுக்கு ஒரு பாடப்புத்தகமாக விளங்குகிறது. ஓய்வுநேரத்தில் இந்தப் ப(பா)டத்தை ஒருமுறை புரட்டிப் பார்க்கலாம்.
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)