‘த கில்லிங்’ 1956 - குற்றவாளிகளாகும் சாமானியர்கள் | ஹாலிவுட் மேட்னி 20

‘த கில்லிங்’ 1956 - குற்றவாளிகளாகும் சாமானியர்கள் | ஹாலிவுட் மேட்னி 20
Updated on
3 min read

துல்லியமாகத் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட பெரும் கொள்ளை, தற்செயல் நிகழ்வால் சிதறிப் போவதே ‘த கில்லிங்’ (THE KILLING -1956) திரைப்படத்தின் ஒருவரிக் கதை. பரபரப்​பான குதிரைப் பந்​த​யத்​துடன் தொடங்​கு​கிறது, படம். செப்​டம்​பர் கடைசி சனிக்​கிழமை மாலை 3:45 மணிக்கு ‘மார்​வின் உங்​கர்’ என்ற முதி​ய​வர் குதிரைகளின்​மேல் பணம் கட்​டு​கிறார்.

அங்​கிருந்து கதை ஒரு மணி நேரம் பின்​னோக்​கிச் செல்​வ​தாக அரூபக் குரல் அறிவிக்​கிறது. ஊழல் போலீஸ் அதி​காரி ராண்டி கென்​னன், கடனை நெருக்​கும் லியோ என்​பவரிடம் அவகாசம் கேட்க, 2600 டாலர் கடன், வட்​டி​யுடன் சேர்ந்து 3000 டால​ராக மாறுகிறது.

கொள்​ளைத் திட்​டத்​தின் ‘மூளை’​யான ஜானி கிளே சிறையி​லிருந்து வந்​ததும், தனது காதலி ஃபே-​விடம் ஒரு பெரிய திட்​டத்​தைக் கூறி, ‘அடுத்த வாரம் அமெரிக்​கா​வில் இருப்​போம்’ என்று நம்​பிக்கைக் கொடுக்​கிறான்.

கதை 6:30 மணிக்கு மாறுகிறது. மைதான பார் டெண்​ட​ரான மைக் தனது நோயாளி மனைவி ரூத்​தி​யிடம் ‘விரை​வில் பணம் வரும்’ என்று ஆறு​தல் சொல்​கிறான். அதே இரவு 7:15 மணிக்​கு, காசாளர் ஜார்ஜ் பீட்டி தனது மனைவி ஷெர்​ரி​யிடம் ‘பெரும் பணம் வரப் போகிறது’ என்று உளற, ஷெர்ரி அதைத் தனது கள்​ளக்​காதலன் வாலுடன் பகிர்ந்து கொள்​கிறாள்.

ஜானி கிளே தனது குழு​வினரை (ராண்​டி, மைக், ஜார்​ஜ்) மார்​வின் உங்​கரின் குடி​யிருப்​பில் சந்​திக்​கிறான். 2 மில்​லியன் டாலர் கொள்​ளைத் திட்​டத்தை வரைபட​மாக விளக்​கு​கிறான்.

ஷெர்ரி ஒட்​டுக் கேட்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்டு எச்​சரிக்​கப்​படு​கிறாள். திட்​டத்​தில் மல்​யுத்த வீரர் மாரிஸை, 2500 டாலருக்​கும், துப்​பாக்கி வீரன் நிக்​கி-யை 5000 டாலருக்​கும் ஒப்​பந்​தம் செய்​கிறான் ஜானி.

குறிப்​பிட்ட நாளில் மாரிஸ், பாரில் ஒரு சண்​டையை உரு​வாக்கி போலீஸை திசைத் திருப்ப, நிக்கி கார் பார்க்​கிங்​கி​லிருந்து ஓடும் குதிரையைச் (ரெட் லைட்​னிங்) சுடு​கிறான். மைதானமே கலவர​மாகிறது.

ஜானி கிளே முகமூடி அணிந்​து, ஜார்ஜ் திறந்து வைத்த கதவு வழி​யாகப் பண அறைக்​குள் நுழைந்து 2 மில்​லியன் டாலர்​களை நிரப்​பு​கிறான். ஜன்​னல் வழி​யாக வீசப்​பட்ட பையை ராண்டி தனது காரில் எடுத்​துச் செல்​கிறான். செஸ் விளை​யாட்​டின் துல்​லி​யத்​தில் திட்​டம் நிறைவேறுகிறது.

திட்​டப்​படி, தன் அறை​யில் ராண்டி வைத்த பணத்தை எடுத்​துக் கொண்டு இரவு 7 மணிக்கு ஜானி வரவேண்​டும். வரவில்​லை; பங்கு பிரிக்​கக் காத்​திருக்​கும் குழு​வினரிடையே பதற்​றம்.

7:15 மணிக்​குக் கதவு தட்​டப்​பட, வந்​தது யார்? கொள்​ளை​யடிக்​கப்​பட்ட பணம் முறை​யாகப் பகிரப்​பட்​ட​தா? சூழ்​நிலை​யால் கொள்​ளை​யர்​களாக மாறிய அந்த சாதாரண மனிதர்​களின் கதி என்ன? என்​பதை வித்​தி​யாச​மான கதை சொல்​லல் பாணி​யுடன், விறு​விறுப்​பாக விவரிப்​பதே ‘தி கில்​லிங்’.

ஜேம்ஸ் பி.ஹாரிஸ் 1956-ல் தயாரித்த இப்​படத்தை லயோனல் ஒயிட் எழு​திய கிளீன் பிரேக் (Clean Break) நாவலைத் தழு​வி, ஜிம் தாம்​சனின் கூர்​மை​யான வசனங்​களு​டன் திரைக்​கதை எழுதி இயக்​கிய​வர் ஸ்டான்லி குப்​ரிக்.

தனது 49 ஆண்​டு​கால திரைப்​பயணத்​தில் வெறும் 13 படங்​கள் மற்​றும் 3 ஆவணப் படங்​களை மட்​டுமே அவர் படைத்​திருக்​கிறார். ‘கற்​பனை செய்ய முடிந்​தால், அதைத் திரை​யில் கொண்டு வரவும் முடி​யும்’ என்ற சித்​தாந்​தத்​துக்கு ஏற்ப, வரலாறு, அறி​வியல் புனை​வு, போர், அரசி​யல் நையாண்டி என அனைத்​துத் தளங்​களி​லும் ஆகச்​சிறந்த மைல்​கல் படங்​களை குப்​ரிக் உரு​வாக்​கி​யுள்​ளார்.

இப்​படத்​தில் வரும் குற்​ற​வாளி​கள் இயல்​பில் கெட்​ட​வர்​கள் அல்ல; தவறான முடிவு​களால் சிக்​கிய​வர்​கள் என்ற உளவியலைச் சொல்​லி​யிருக்​கிறார் குப்​ரிக். ஜானி கிளே (ஸ்​டெர்​லிங் ஹெய்​டன்) தனது சிறை அனுபவத்​துக்​குப் பிறகு காதலி ஃபே-வுடன் (கோலீன் கிரே) நிம்​ம​தி​யாக வாழ​வும், காசாளர் ஜார்ஜ் (எலிஷா குக்) தன்னை அவம​திக்​கும் மனை​வி​யின் அன்​பைப் பெற​வும், ரோந்து போலீஸ் ராண்டி (டெட் டி கோர்​சி​யா) தனது கடனை அடைக்​க​வும் குற்​றச் செயல் புரி​கிறார்​கள்.

நச்​சும் கவர்ச்​சி​யும் கலந்த ‘ஃபெம் ஃபேடல்’ கதா​பாத்​திர​மான ஷெர்ரி (மேரி விண்ட்​சர்), படத்​தின் திருப்​பு​முனை. கணவன் ஜார்​ஜுக்​குத் செய்​யும் அவரின் பேராசை​யால், பணத்​தைப் பகிரும் இடத்​துக்கு வரும் காதலன் வால் மற்​றும் அவனது கூட்​டாளி நடத்​தும் துப்​பாக்​கிச் சண்​டை​யில், ஜானியைத் தவிர அனை​வரும் கொல்​லப்​படு​கிறார்​கள்.

விதி​யின் முன் மனிதத் திட்​டங்​கள் எவ்​வளவு பலவீன​மானவை என்​ப​தற்கு இப்​படத்​தின் க்ளை​மாக்ஸை சான்​றாக வடிவ​மைத்​திருக்​கிறார் குப்​ரிக். விமான நிலைய ஓடு​தளத்​தில் ஒரு செல்ல நாய் குறுக்கே ஓட, நிலை​தடு​மாறிய தள்​ளுவண்டி மோதி ஜானி​யின் பெட்டி உடைய, 2 மில்​லியன் டாலர் பணமும் விமான என்​ஜின் காற்​றில் காகிதங்​களாகச் சிதறிப் பறக்​கிறது.

போலீ​ஸார் நெருங்க, ‘ஜானி, தப்​பித்​து​விடு!’ எனக் கதறும் காதலி​யிடம், ‘இனி என்ன வித்​தி​யாசம்? (What difference does it make?) என்று விரக்​தி​யுடன் கேட்​கிறான் ஜானி. எல்​லாம் முடிந்த பிறகு மீண்​டும் ஓடி என்ன பயன் என்​கிற அந்த உளவியல் நிதர்​சனம், ரசிகர்​களை ஆச்​சர்​யப்​படுத்​துகிறது.

ஒளிப்​ப​தி​வாளர் லூசி​யன் பலார்ட், பந்தய மைதானத்​தின் பரபரப்​பு, டிக்​கெட் விற்​பனை, குதிரைகளின் வேகம் மற்​றும் பார்​வை​யாளர்​களின் உணர்ச்​சிகளை ஒரு ‘டாக்​குமென்​டரி’ பாணி​யில் பதிவு செய்​துள்​ளார். நேரக் கட்​டுப்​ பாட்டை மைய​மாகக் கொண்ட இத்​திரைக்​கதை​யில், படத்​தின் ஒவ்​வொரு ஃபிரேமை​யும் துல்​லிய​மாகச் செதுக்​கி​யுள்​ளார்.

படத்​தொகுப்​பாளர் பெட்டி ஸ்டீன்​பெர்க், காலத்தை உடைத்து ஒரே சம்​பவத்​தைப் பல கோணங்​களில் இணைக்​கும் ‘நான்​-லீனியர்’ உத்தி மூலம் ஒரு புதிய பாணி​யையே உரு​வாக்​கி​யுள்​ளார். இது பிற்​கால ‘ஹீஸ்ட்’ மற்​றும் ‘டைம் லூப்’ திரைப்​படங்​களுக்கு ஒரு முன்​மா​திரி. ஜெரால்ட் ஃப்​ரைட்​-இன் பின்​னணி இசை, காட்​சிகளில் சஸ்​பென்ஸ் ஆரம்​பிக்​கும் முன்​னரே நம்மை தயார்​படுத்​துகிறது.

படத்​தின் விறு​விறுப்​புக்கு இசை​யும் முக்​கிய காரணம். படத்​தின் தொழில்​நுட்ப உச்​சமே கொள்​ளைச் சம்​பவ​மும், குதிரை சுடப்​படும் காட்​சி​யும்​தான். ‘டெலிஃ​போட்​டோ’ லென்ஸ் மூலம் குதிரை சுடப்​படு​வதை​யும், அதனால் ஏற்​படும் ஒட்​டுமொத்​தக் குழப்​பத்​தை​யும் பயன்​படுத்தி கொள்​ளை​யர்​கள் கவனத்​தைத் திசை​திருப்​புவதைத் தொழில்​நுட்ப ரீதி​யாகக் கச்​சித​மாகக் காட்​டி​யுள்​ளனர்.

பண அறையைச் சூறை​யாடும் காட்சி எவ்​விதப் பின்​னணி இசை​யுமின்​றி, அந்த இடத்​தின் இயற்​கை​யான சத்​தங்​களு​டன் படமாக்​கப்​பட்​டுள்​ளது. ‘த கில்​லிங்’ வெளிவந்த காலத்​தில் வணிக ரீதி​யாக வெற்றி பெறா​விட்​டாலும், குற்​றப்பட வரலாற்​றில் நீங்​காத் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யது. ‘குற்​ற​வாளி​கள் எப்​போதும்​ தண்​டிக்​கப்​படு​வார்​கள்​’ என்​ற நீதி​யைத்​ தாங்​கிய இப்​படத்​தை, அதன்​ தொழில்​நுட்​பச்​ சிறப்​புக்​காக இன்​றும்​ ரசிக்​கலாம்​.

(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)

‘த கில்லிங்’ 1956 - குற்றவாளிகளாகும் சாமானியர்கள் | ஹாலிவுட் மேட்னி 20
‘த தேர்ட் மேன்​’ 1949 - யார் அந்த 3-வது மனிதன்? | ஹாலிவுட் மேட்னி 19

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in