

லாஸ் ஏஞ்சல்ஸ்: பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவான ‘மைக்கேல்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்துள்ளது.
அன்டோன் ஃபுகுவா இயக்கத்தில், மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகன் ஜாஃபர் ஜாக்சன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த 'மைக்கேல்' திரைப்படம், உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8,300 கோடிக்கும் மேல்) வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலக சினிமா வரலாற்றிலேயே மிக அதிக வசூல் செய்த பயோபிக் என்ற புதிய சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது.
இந்த 1 பில்லியன் டாலர் மைல்கல்லை எட்டுவதற்கு முன்பாக, இத்திரைப்படம் இரண்டு மாபெரும் ஹிட் படங்களின் சாதனைகளை முறியடித்திருந்தது. முதலில், 2018-ஆம் ஆண்டு வெளியான ஃப்ரெடி மெர்குரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'போஹிமியன் ராப்சோடி' ($911 மில்லியன்) படத்தின் வசூலை முந்தியது. அதைத்தொடர்ந்து, அதுவரை உலகின் மிக அதிக வசூல் செய்த பயோபிக் என்ற சாதனையைத் தன்வசம் வைத்திருந்த கிறிஸ்டோபர் நோலனின் 'ஓப்பன்ஹெய்மர்' ($977 மில்லியன்) படத்தின் சாதனையைத் தகர்த்தது.
ஹாலிவுட்டின் முன்னணி பெரிய ஸ்டுடியோக்கள் பலவும் இந்தத் படத்தை தயாரிக்கத் தயங்கி நிராகரித்த நிலையில், லயன்ஸ்கேட் ஸ்டுடியோ, யுனிவர்சல் பிக்சர்ஸ் மற்றும் கினோ ஃபிலிம்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து இத்திரைப்படத்தைத் துணிச்சலுடன் தயாரித்தது. ஒரு சுயாதீன ஸ்டுடியோவால் வெளியிடப்பட்டு 1 பில்லியன் டாலர் வசூலித்த முதல் திரைப்படம் என்ற பெருமையையும் 'மைக்கேல்' பெற்றுள்ளது.
இத்திரைப்படம் வெளியான போது திரைப்பட விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. பிரபல 'ராட்டன் டொமாட்டோஸ்' தளத்தில் விமர்சகர்கள் இதற்கு 40% புள்ளிகள் மட்டுமே வழங்கியிருந்தனர். ஆனால், ரசிகர்கள் இந்த படத்தை வியந்து கொண்டாடியதன் விளைவாக, இதன் ரசிகர்களின் மதிப்பீட்டுப் புள்ளி 97% என்ற உயரத்தை எட்டியது.
இதன் காரணமாக, படம் வெளியான முதல் வார இறுதியிலேயே உலகளவில் 217 மில்லியன் டாலர் வசூலித்து, மிகப்பெரிய ஓப்பனிங் சாதனையை படைத்தது. தியேட்டர்களில் வெளியான மூன்று மாதங்களுக்குப் பிறகும் தொய்வின்றி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி இந்த $1 பில்லியன் மைல்கல்லை எட்டியுள்ளது.