

1980-ல் வெளிவந்த மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் மம்மி பேரு மாரி என்ற பாடலை ஆண் குரலில் பாடி அசத்தினார் ஜானகி.
33 மாநில விருதுகள்சிறந்த பின்னணிப் பாடகிக்காக 33 முறை மாநில விருதுகளை இசை அரசி ஜானகி பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசின் விருதை 6 முறையும், ஆந்திர அரசின் நந்தி விருதை 10 முறையும், கேரள அரசின் விருதை 11 முறையும் வென்றுள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி விருதும் அவருக்குக் கிடைத்துள்ளது. 1986-ல் சாஹேப் இந்திப் படத்துக்காக இந்திப் பாடல் பாடி பிலிம்பேர் விருதையும் பெற்றார். அவரது திரையுலக சாதனையைப் பாராட்டி மைசூரு பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது. கர்நாடக அரசின் உயரிய விருதான ராஜ்யோத்சவா விருதையும் அவர் பெற்றுள்ளார்.
ஜானகி-எஸ்பிபி-ராஜா:
திரையுலகில் இசையமைப்பாளர் இளையராஜா, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி கூட்டணி பல சிறந்த திரைப்பாடல்களைக் கொடுத்து சாதனை படைத்துள்ளது.
மறைந்தப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து அதிக பாடல்களை ஜானகி பாடியுள்ளார். மேலும் கே.ஜே.யேசுதாஸ், பி.பி. ஸ்ரீநிவாஸ், டி.எம்.சவுந்தரராஜன் ஆகியோருடன் இணைந்து ஏராளமான பாடல்களை ஜானகி பாடியுள்ளார்.
தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று பரவலாக அழைக்கப்பட்ட ஜானகி, கான கோகிலா, கான கோகிலே என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
தாய் மொழி தெலுங்கு என்ற போதிலும் கன்னட மொழியில் அதிக பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.
1938-ல் பிறந்த ஜானகி தனது 10-வது வயதில் நாகஸ்வர வித்வான் பைடிசுவாமியிடம் கர்நாடக இசையின் நுணுக்கங்களையும், ஆரம்பப் பாடங்களையும் பயின்றார்.
1957-ல் தனது முதல் பாடலைப் பாடிய அவர், 2016-ல் 10 கல்பனகள் என்ற மலையாளப் படத்துக்காக தனது கடைசிப் பாடலைப் பாடினார்.
வெளிவராத முதல் பாடல்:
தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்றழைக்கப்படும் எஸ்.ஜானகி காதல், சோகம், நகைச்சுவை, கிண்டல் என அத்தனை உணர்ச்சிகளுக்கும் இனிமையான பாடல்களை பாடியிருக்கிறார்.
அந்தப் பாடல்கள் அனைத்தும் எப்போதுகேட்டாலும் மனதுக்கு இதம் தரும். ஆனால் அவர் தமிழில் பாடிய முதல் பாடல் வெளிவரவே இல்லை என்பது சோகம். அவர் ‘விதியின் விளையாட்டு’என்ற படத்தில் முதன்முறையாக பாடினார்.
இதுபற்றி அவர் முன்னர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; எங்கள் மாமா, ஏவிஎம் நிறுவனத்துக்கு அப்போது ஒரு கடிதம் எழுதினார். என் மருமகள் சிறப்பாக பாடுவார், அவரை சினிமாவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று கடிதம் எழுதினார்.
அங்கிருந்து ஆடிஷனுக்கு வரச் சொல்லி அழைப்பு வந்தது. நெல்லூரில் இருந்து சென்னை ஏவிஎம் நிறுவனத்துக்கு புறப்பட்டு வந்தோம். சுதர்சனம், கோவர்த்தனம் இரண்டு பேரும் இசை அமைப்பாளர்கள்.
அவர்களும் ஏவிஎம் செட்டியாரும் என் குரலை கேட்டு தேர்வு செய்தார்கள். அந்த படம் ‘விதியின் விளையாட்டு’. ‘பெண் என் ஆசை பாழானது ஏனோ” என்ற பாடலை பாடினேன். அந்தப் பாடல் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால், அந்தப் படம் வெளியே வரவே இல்லை. விதி விளையாடிவிட்டது. அந்தப் பாடல் வெளிவராததற்காக மிகவும் வருத்தப்பட்டேன். பிறகு மதகளநாட்டு மேரி என்ற தமிழ்ப்படத்தில் பாடினேன்.
அதுதான் என் முதல் தமிழ்ப்பாடல். சிறுவயதில் இருந்தே பாடிக்கொண்டிருக்கிறேன். பத்து வயது ஆனபோது என் அம்மா கிளாசிக்கல் பாடல் கற்றுக்கொள்ள என்னை அனுப்பினார். அப்போது பலர் அங்கு கற்றுக்கொண்டிருந்தார்கள்.
என்னை சும்மா உட்கார் என்று சொல்லிவிட்டார். மற்றவர்களிடம் சங்கதி ஒன்றை பாடச் சொல்வார். பிறகு என்னை பாடச் சொல்வார். என் குரலைக் கேட்டு, ‘இவரிடம் கற்றுக்கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் சொல்வார். ஆனால் தொடர்ந்து அவரிடம் நான் கற்றுக்கொள்ளவில்லை.
குழந்தை குரல்: அப்போது டூயட் பாடும்போது, உடன் பாடுகிறவர் சரியாக பாட வேண்டும். சில நேரம் நான் சிறப்பாக பாடியிருப்பேன். உடன் பாடுகிறவர் சரியாக பாடவில்லை என்றால், ரீடேக் போக வேண்டும். சில நேரம் நாம் சிறப்பாக பாடியிருப்பதாக நினைக்கும்போது, அவர் தவறாக பாடினால், முழுவதும் திரும்ப பாட வேண்டும். அப்போது வருத்தமாக இருக்கும்.
சில நேரம் கோபமாக வரும். சின்ன வயது குழந்தைகளிடம் கொஞ்சி கொஞ்சிப் பேசுவது வழக்கம். அப்படி பேசினால், குழந்தைகள் என்னுடன் ஆசையாக பேச வருவார்கள். அப்படி குழந்தை போல பேசி பழகியதால், குழந்தை குரலில் அவர்களை போலவே என்னால் பாட முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.