

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் மீது அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெட் தொடர்ந்த குடும்ப வன்முறை வழக்கால் அவரது ஹாலிவுட் திரைப்பயணம் பாதிக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக ஹாலிவுட் படங்களில் நடிக்காத அவர், ‘மினமாட்டா’, ‘ஜீன் டு பாரி’ போன்ற சர்வதேச படங்களில் நடித்தார். ‘மாட்’, ‘த்ரீ டேஸ் ஆன் தி விங் ஆஃப் மேட்னஸ்’ ஆகிய படங்களையும் இயக்கினார்.
தற்போது அவர் ஹாலிவுட்டுக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அவர் நடித்துள்ள புதிய படம் ‘எபனேசர்: எ கிறிஸ்துமஸ் கரோல்’. சார்ல்ஸ் டிக்கன்ஸின் புகழ்பெற்ற ‘எ கிறிஸ்துமஸ் கரோல்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. வழக்கமான கிறிஸ்துமஸ் கதையாக இல்லாமல், திகிலும் அமானுஷ்ய விஷயங்களையும் இணைத்து உருவாக்கியுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற சான் டியாகோ, காமிக்-கான் 2026 விழாவில், பாரமவுண்ட் பிக்சர்ஸ் இப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், புகழ்பெற்ற எபெனீசர் ஸ்க்ரூஜ் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜானி டெப், அந்த வேடத்திலேயே ரசிகர்கள் முன் தோன்றி அச்சரியப்படுத்தினார்.