

நடிகை பிரியங்கா சோப்ரா
ஹாலிவுட் திரைப் படங்களைப் போல இந்திய திரைப்படங்கள் உலகளாவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று ஒருகாலத்தில் தன்னிடம் கூறப்பட்டதாகப் பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
கேன்ஸில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர் கூறும்போது, “ஹாலிவுட் படங்களைப் போல இந்தியத் திரைப்படங்கள் ஒருபோதும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற முடியாது என்று என்னிடம் சொன்னார்கள். உங்கள் மொழியை யாரும் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதே காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் நல்ல கதைகளுக்கு மொழி ஒரு தடையல்ல என்பதை இன்று உலகமே நிரூபித்துள்ளது.
இப்போது எந்த மொழியில் கதை சொல்லப்படுகிறது என்பது முக்கியமல்ல. வலுவான யோசனைகளும் நல்ல கதைகளும் தான் முக்கியம். அதனால் தான் உலகம் முழுவதும் மக்கள் பல்வேறு மொழிப் படங்களை ரசிக்கிறார்கள்.
முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் 1950-களிலிருந்தே இந்தியத் திரைப்படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், வெளிநாடுகளில் தொடர்ச்சியான வெற்றி என்பது 2000-க்குப் பிறகே தொடங்கியது; முதலில் வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மூலமாகவும், பின்னர் அவர்களைத் தாண்டிப் பரவலாகவும் இந்த வெற்றி அமைந்தது.
‘முத்து’, ‘தங்கல்’, ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற திரைப்படங்கள் சீனா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இந்தியர் அல்லாதவர்களாலும் அதிகளவில் பார்க்கப்பட்டன. பொழுதுபோக்குத் துறையில் செயல்படும் ஒரு கலைஞராக இருப்பதற்கு இது அற்புதமான காலம். ஏனென்றால் இங்கு ஐடியாக்களே மூலதனமாகத் திகழ்கின்றன.
உங்களிடம் நல்ல ஐடியா இருந்தால், அதைப் படமாக்கி யூடியூப்பில் பதிவேற்றலாம்; அது இப்போது வெளியாகியுள்ள ‘அப்செஷன்’ படத்தைப் போலப் பிரபலமடையலாம் என கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.