

வலது: நடிகை அன்சிபா | இடது: நடிகைகள் லட்சுமி பிரியா, ஸ்வேதா மேனன்
மலையாள நடிகைகளான லட்சுமி பிரியா, ஸ்வேதா மேனன் உள்ளிட்டோர் மீது நடிகை அன்சிபா ஹசன் அவதூறு புகார் அளித்துள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’வின் நிர்வாகிகள் தேர்தல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன், பொதுச் செயலாளராக நடிகைகுக்கு பரமேஸ்வரன், துணைத் தலைவராக லட்சுமி பிரியா, இணைச் செயலாளராக அன்சிபா உள்பட 17 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மலையாள நடிகர்கள் சங்கத்துக்கு ஒரு பெண் தலைவரானது இதுவே முதல் முறை என்பதால் பாராட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னை நடிகர் டினி டோம், ‘ஜிகாதி’ என்று அழைத்ததாக அன்சிபா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, லட்சுமி பிரியா மீதும் டினிடோம் மீதும் அவர் கொச்சி போலீஸில் புகார் செய்தார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ‘அம்மா’வின் பொதுக் குழுவில் பிரச்சினை ஏற்பட்டதால் தலைவர் ஸ்வேதா மேனன் உள்பட ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் லட்சுமி பிரியா, ஸ்வேதா மேனன் உள்ளிட்டோர் மீது அன்சிபா ஹசன் போலீஸில் அவதூறு புகார் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி பொய்யான, ஆபாசமான மற்றும் பெண்மையை இழிவுபடுத்தும் வகையிலான வீடியோவை பரப்பியதாகக் குற்றம்சாட்டி, எர்ணாகுளம் பாலரிவட்டம் போலீஸ் ஸ்டேஷனில் அவர் புகார் அளித்துள்ளார்.
புகாரில், ‘கேன் சேனல் மீடியா’ என்ற இன்ஸ்டா பக்கத்தின் மூலம் லட்சுமி பிரியா, சுகுமார் என்பவரின் உதவியுடன் தன்னைப் பற்றி அவதூறான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் அடங்கிய வீடி யோவை வெளியிட்டுள்ளார் என்றும் இந்தச் செயலுக்குப் பின்னால் ஸ்வேதா மேனன் சதித் திட்டம் தீட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த வீடியோ தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டதாகக் கூறியுள்ள அன்சிபா, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதற்கிடையே அன்சிபாவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள லட்சுமி பிரியா, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், அன்சிபாவுக்கு எதிராக ரூ.10 கோடி இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.