

தமிழில், துப்பாக்கி, அஞ்சான், மதராஸி ஆகிய படங்களில் நடித்திருப்பவர், இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால். இவர் ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ என்ற ஹாலிவுட் ஆக் ஷன் படத்தில் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். புகழ்பெற்ற வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை கிட்டாவோ சகுராய் இயக்கியுள்ளார்.
இதில் நோயா சென்டினியோ, ஆண்ட்ரூ கோஜி, கல்லினா லியாங், ஜோ அனோய், டேவிட் தாஸ்த்மால்சியன், கோடி ரோட்ஸ், ஆண்ட்ரூ ஷூல்ட்ஸ், எரிக் ஆண்ட்ரே ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த அதிரடி சாகசப் படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் அக். 16-ல் வெளியாகிறது.
இப்படத்துக்காக உடல் ரீதியான பயிற்சிகளை விட, மற்ற அனைத்துக் கதாபாத்திரங்களின் சண்டை முறைகளையும் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது என்று வித்யுத் ஜம்வால் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “தால்சிம் மோதிய ஒவ்வொரு கதாபாத்திரமும் எவ்வாறு சண்டையிடுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டியிருந்தது. பார்த்ததால் படப்பிடிப்பில் அது மிகவும் உதவியாக இருந்தது. இதன் மூலம் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. இதில் நடித்தது சிறந்த அனுபவம். எனது திரை வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே என்னுடன் இருக்கும் ‘ஆக் ஷன் ஹீரோ’ முத்திரை குறித்து கேட்கிறார்கள்.
அப்படிச் சொல்வதற்காக நான் கவலைப்படவில்லை. எனது சண்டைத் திறனுக்காகவே நான் அடையாளம் காணப்பட வேண்டும் என்று விரும்பினேன். அப்படித்தான் முத்திரைக் குத்தப்பட வேண்டும் என்றும் நினைத்தேன். வித்யுத் என்றால் சண்டைக்காட்சிகள் என்று அனைவரும் சொல்ல வேண்டும் என்றும் விரும்பினேன். இறுதியாக நான் நினைத்த அந்த இடத்தை அடைந்துவிட்டேன். அதனால்தான் ஹாலிவுட்டில் இருந்து ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ படக்குழு அழைத்து, அப்படத்தில் என்னையும் ஓர் அங்கமாக்கி இருக்கிறது” என்றார்.