

இந்திய- சீன பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையே, லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு கடும் மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்.
சீன தரப்பில் 38 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ‘பேட்டில் ஆஃப் கல்வான்’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சல்மான் கான், கர்னல் சந்தோஷ் பாபுவாக நடித்துள்ளார். அபூர்வா லக்கியா இயக்கியுள்ள இப்படத்தில், சித்ரங்கடா சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்திய வீரர்களின் துணிச்சலைக் காட்டும் விதமாக உருவாக்கியுள்ள இப்படத்தின் டீஸர் வெளியான போது, சீனாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வரலாற்று உண்மைகள் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் குற்றம் சாட்டின. இதையடுத்து இப்படத்தின் தலைப்பு ‘மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்’ என்று மாற்றப்பட்டது.
இந்தப்படம் கடந்த ஏப். 17-ல் வெளியாவதாக இருந்தது. பின்னர் ஆகஸ்ட் மாதம் வெளியிடத் திட்டமிட்டனர். இந்நிலையில் தணிக்கைச் சான்றிதழ் வழங்க மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் தற்காலிகமாக மறுத்துள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை சான்றிதழ் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் இப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகாது என்று கூறப்படுகிறது.