ஆஸி.யை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்திய எகிப்து: பாலஸ்தீன மக்களுக்கு வெற்றி அர்ப்பணிப்பு | FIFA WC 2026

ஆஸி.யை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்திய எகிப்து: பாலஸ்தீன மக்களுக்கு வெற்றி அர்ப்பணிப்பு | FIFA WC 2026
Updated on
2 min read

டலாஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ரவுண்ட் 32 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் முழு நேர ஆட்டத்தை ஆஸ்திரேலியா-எகிப்து அணிகள் 1-1 என்று சமன் செய்ய பெனால்டி ஷூ அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் எகிப்து அணி வென்று ரவுண்ட் 16-க்குள் நுழைந்து வரலாறு படைத்தது.

எகிப்து பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் இந்த வெற்றியை பாலஸ்தீன மக்களுக்கு அர்ப்பணித்தார். அமெரிக்காவில் ஆடிக்கொண்டு வெற்றியை பாலஸ்தீனத்துக்கு அர்ப்பணித்த தைரியம் உண்மையில் வரவேற்கத்தக்கதே.

“என் இதயமும், ஆன்மாவும் பாலஸ்தீன மக்கள் உடனேயே உள்ளன. நான் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, இந்த வெற்றியை அவர்களுக்கே அர்ப்பணிக்கிறேன்.

அரபு மக்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். நல்ல மனிதர்களுக்காகவே நான் வெற்றிபெற விரும்பினேன்; இங்கே இருக்கும் அந்த நல்ல மனிதர்களின் காரணமாகவே இறைவன் எங்களைப் பெருமைப்படுத்துகிறார்” என்றார் ஹசன்.

ஆஸ்திரேலியா செய்த மிகப்பெரிய தவறு பெனால்டி ஷூட் அவுட்டின் போது மற்றொரு கோல் கீப்பர் மேட் ரயானை கோல் கீப்பராக நியமித்ததே. இந்த காய் நகர்த்தல் எடுபடவில்லை. மாறாக எதிர்மறையாகிப் போனது. ஒழுங்காக பாட்ரிக் பீச் என்ற ஃபுல் டைம் கோல் கீப்பரையே பெனால்டி ஷூட் அவுட்டிலும் கோல் கீப்பிங் செய்யச் சொல்லியிருக்கலாம்.

ஆட்டம் 1-1 என்ற சமநிலையில் நீடித்த நிலையில், போட்டி முடிவதற்கு 90 வினாடிகள் மட்டுமே இருந்தபோது, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தந்திரோபாயமாக ஆஸ்திரேலிய கோல் கீப்பர் பேட்ரிக் பீச்சுக்கு பதிலாக ரயான் களமிறக்கப்பட்டார். ஆனால் பெனால்டி ஷூட் அவுட்டில் எகிப்து வீரர்கள் அடித்த எந்த முயற்சியையும் அவர் தடுக்க முடியவில்லை.

இதற்கு முன்பு, கூடுதல் நேரத்தின் இறுதியில் ரமி ரபியாவின் ஹெடிங் கோல் முயற்சியை அபாரமாகத் தடுத்திருந்த ஆஸ்திரேலிய கோல் கீப்பர் பேட்ரிக் பீச்சை மாற்றிய முடிவு பலனளிக்கவில்லை. மேலும், ஆஸ்திரேலியாவின் ஹாரி சவுட்டர் தனது முதல் பெனால்டியை வானில் பறக்கவிட்டார். 18 வயதான லூகாஸ் ஹெரிங்டனின் முயற்சி கிராஸ் பாரைத் தாக்கியது.

மறுபுறம், எகிப்து தனது நான்கு பெனால்டி வாய்ப்புகளையும் வெற்றிகரமாக கோலாக மாற்றியது. குறிப்பாக நட்சத்திர வீரர் முகமது சாலா மென்மையாக அடித்த ‘சிப்’ பெனால்டி ரசிகர்களை கவர்ந்தது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் எகிப்து தனது ஐந்து பெனால்டி ஷூட் அவுட் முயற்சிகளில் முதல் வெற்றியை ஈட்டியது.

போட்டியின் 13-வது நிமிடத்தில் எமாம் அஷூர் எகிப்துக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஃப்ரீ-கிக்கில் இருந்து வந்த பந்தை முதலில் அடித்த அவரது முயற்சி தடுக்கப்பட்டாலும், அதன்பின் வந்த க்ராஸை தலையால் முட்டி கோலாக்கினார். இது உலகக் கோப்பையில் அஷூரின் இரண்டாவது கோலாகவும், தொடரின் 250-வது கோலாகவும் அமைந்தது.

இரண்டாவது பாதி தொடங்கியதும், ஓமர் மர்மவ்ஷ் அடித்த ஷாட் நூலிழையில் கோலைத் தவறவிட்டது. பின்னர் ரமி ரபியாவின் ஹெடர் முயற்சியையும் ஆஸ்திரேலிய கோல் கீப்பர் தடுத்தார்.

இதற்கிடையில், ஆஸ்திரேலியா சமநிலையை எட்டியது. முன்பே தலையில் பலத்த அடிபட்டிருந்த முகமது ஹானி, ஐடன் ஓ'நீலின் ஃப்ரீ-கிக்கை தடுக்க முயன்றபோது தவறுதலாக தனது சொந்த வலையில் பந்தை செலுத்தினார். எகிப்தின் ஓன் கோலினால் ஆஸ்திரேலியா சமன் செய்தது.

இந்த உலகக் கோப்பையில் முகமது ஹானி அடித்த இரண்டாவது சுய கோல் இதுவாகும். இதன் மூலம் 1966-ஆம் ஆண்டு பல்கேரியாவின் இவான் வுட்சோவுக்குப் பிறகு ஒரே உலகக் கோப்பை தொடரில் இரண்டு சுய கோல்கள் அடித்த இரண்டாவது வீரராக அவர் மாறினார். மேலும் இந்த தொடரில் பதிவான 13-வது சுயகோலாக இது அமைந்து புதிய சாதனையையும் உருவாக்கியது.

போட்டிக்குப் பிறகு பேசிய சாலா, “மூத்த வீரராக எனக்கு பொறுப்பு இருப்பதை உணர்ந்தேன். பெனால்டியை எப்படி அடிப்பது என்று கடைசி நிமிடத்தில்தான் முடிவு செய்தேன். இது என்னுடைய கடைசி உலகக் கோப்பையாக இருக்கக்கூடும் என்பதால் அந்த முயற்சியை மேற்கொண்டேன். இது வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி. போட்டிக்கு முன் வீரர்களிடம், ‘உங்கள் வாழ்க்கையில் விளையாடக்கூடிய மிகப்பெரிய மேடை இதுதான்’ என்று கூறினேன்” என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஆஸி.யை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்திய எகிப்து: பாலஸ்தீன மக்களுக்கு வெற்றி அர்ப்பணிப்பு | FIFA WC 2026
“ஓய்வு குறித்து பேச இன்னும் நேரம் உள்ளது” - கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளிப்படை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in