

நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ‘ராமாயணா’ படத்தில் சீதையாக நடித்திருக்கிறார் சாய் பல்லவி. நவ.5-ல் வெளியான இப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. இதில் சீதையாக நடிப்பதற்குச் சாய் பல்லவி சரியான தேர்வல்ல என்றும் அவரது தோற்றம் குறித்தும் பாலிவுட் பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சாய் பல்லவியிடம் இதுபற்றி கேட்கப்பட்டது.
அவர் கூறும்போது, ‘‘சீதை, எப்படி அழகாக இருக்க வேண்டும் என்பது போன்ற சமூக வலைதளக் கருத்துகளை நான் பார்க்கிறேன். ஆனால், இதுபோன்ற விமர்சனங்கள் நம்முடைய மன உறுதியை உலுக்கும் என்றால் நம்மை இன்னும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒருவர் எவ்வளவு உறுதியாக இருக்க முடியுமோ, அந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறேன். கருத்துகள் என்பவை வெறும் கருத்துகள் மட்டுமே. எனவே, வளரும் பருவத்தில் தாழ்வு மனப்பான்மை அல்லது பாதுகாப்பற்ற உணர்வு இருந்தால், நீங்கள் வலிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் இந்த உலகத்தை எதிர்கொள்ளவோ அல்லது தேவையற்ற விமர்சனங்களைப் புறக்கணிக்கவோ உங்களால் முடியும். சினிமாவில் வெறும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நான் நடிக்க விரும்புவதில்லை. ஏற்கும் வேடங்களில் வலிமையும் ஆழமும் இருக்க வேண்டும். வணிக ரீதியான படங்களில் நடிப்பதற்குப் பதிலாக, அர்த்தமுள்ள கதா பாத்திரங்களுக்காகத் தொடக்கத்தில் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்தேன்” என்று கூறியுள்ளார்.