

பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையை ‘ராமாயணா’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார். 2- பாகமாக உருவாகியுள்ள இதன் முதல் பாகம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் வெளியீடு நேற்று (ஜுலை 24) நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சர்வதேச அளவில் இப்படத்தை வெளியிடுவதற்காக, சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் டிரெய்லர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதை தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடனான கூட்டு முயற்சியின் மூலம், ‘ராமாயணம்’ கதையை உலகுக்கு எடுத்துச் செல்லும் எனது கனவு நனவாகியுள்ளது. உலகளாவிய வெளியீட்டின் ஒரு பகுதியாக டிரெய்லர்,பின்னர் வெளியிடப்படும். பிரம்மாண்டமான அளவில் சர்வதேச பார்வையாளர்களுக்கு இப்படம் கொண்டு செல்லப்படும். இந்தியத் திரையுலக வரலாற்றில் ‘ராமாயணம்’ முக்கிய திருப்புமுனையாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
இதில் ரன்பீர் கபூர் ராமனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் ராவணனாகவும் சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர். சூர்ப்பணகையாக ரகுப் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.