“சீதையாக நடிப்பது என் பிறவிப்பயன்” - சாய் பல்லவி நெகிழ்ச்சி

“சீதையாக நடிப்பது என் பிறவிப்பயன்” - சாய் பல்லவி நெகிழ்ச்சி
Updated on
1 min read

புதுடெல்லி: நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் 'ராமாயணா: பாகம் 1' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு, டெல்லி பாரத் மண்டபத்தில் 'பிரதம் சங்கல்ப்' நிகழ்வுடன் நடைபெற்றது. இந்த விழாவில், ரன்பீர் கபூர்ன், சாய் பல்லவி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் நடிப்பது குறித்து சாய் பல்லவி பேசியதாவது: "நடிகர்கள் நினைத்த மாத்திரத்தில் தேவதைகளாகவோ அல்லது கடவுள்களாகவோ நடித்துவிட முடியாது. இப்படி ஒரு தெய்வீகக் கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது என்பிறவிப்பயன், இதைப் பற்றி ஒரு கலைஞரால் சாதாரணமாகக் கற்பனை கூடச் செய்ய முடியாது. 

உலகிற்கு மிகச்சிறந்த ஒரு படைப்பை வழங்க வேண்டும் என்பதற்காகத் தங்களின் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுத்து உழைக்கும் ஒரு குழு அமைவது வரம். ஏனெனில், இந்தத் திரைப்படம் எதிர்காலத் தலைமுறையினர் திரும்பிப் பார்க்கும் ஒரு வரலாறாக மாறப்போகிறது. அப்படிப்பட்ட உன்னதமான படத்தில் என்னைச் சேர்த்ததற்காகத் தயாரிப்பாளர் நமீத் மல்ஹோத்ரா மற்றும் இயக்குனர் நிதேஷ் திவாரிக்கு என் நன்றிகள்.

சீதா தேவியாக நடிக்கும் வாய்ப்பை நான் தேடிப் போகவில்லை, அது எனக்குக் கிடைத்த ஆசிர்வாதம் என்றே கருதுகிறேன். ஒரு காகிதத்தில் எழுதி வைத்துவிட்டு இப்படித்தான் நடிப்பேன் என்று கூறக்கூடிய பாத்திரம் அதுவல்ல. படப்பிடிப்பின் போது நான் அமைதியாக தியானத்தில் அமர்ந்து, 'சீதா அம்மா, இந்த படத்துக்கு என்ன தேவையோ அதை என் வழியே கொண்டு வாருங்கள்' என்று வேண்டிக் கொள்வேன். 

எனது எண்ணங்களை எப்போதுமே தூய்மையாகவும், நடுநிலையாகவும் வைத்திருக்க முயன்றேன். அந்த முயற்சியில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். குழுவினர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்துக்காக உழைத்து வருகிறார்கள். இந்த வரலாற்றுப் பயணத்தில் இணைந்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன்"

'டங்கல்' மற்றும் 'சிச்சோரே' போன்ற படங்களை இயக்கிய நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம், உலகத்தரம் வாய்ந்த சிஜி தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இரு இசையமைப்பாளர்கள் இப்படத்துக்காக கூட்டணி அமைத்துள்ளனர். மேலும், ராவணனாக நடிகர் யஷ், அனுமனாக சன்னி தியோல் மற்றும் லட்சுமணனாக ரவி துபே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வரும் ஜூலை 24 அன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

“சீதையாக நடிப்பது என் பிறவிப்பயன்” - சாய் பல்லவி நெகிழ்ச்சி
‘ஜனநாயகன்’ ரிலீஸ் எதிரொலி: தள்ளிப்போகும் ஜி.வி.பிரகாஷ், லோகேஷ் படங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in