

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியின், ஹன்சாரி பிரேம் நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமண் மற்றும் அவரது மனைவி அனிதாவும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து இருந்தார். இருவரும் நடிகை ராக்கி சாவந்த் நடத்திய ‘ராக்கி கா இன்சாஃப்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியின் மூலம் குடும்ப தகராறுக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்பினார், லட்சுமண்.
ஆனால், நிகழ்ச்சியில் நடிகை ராக்கி, அவரை அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவருடைய வார்த்தைகளால் மனவேதனை அடைந்த லட்சுமண், தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து லட்சுமணின் தாயார் சாவித்திரி போலீஸில் புகார் அளித்தார். இந்த சம்பவம் 2010-ம் ஆண்டுநடந்தது. இது தொடர்பான வழக்கில் நடிகை ராக்கி பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இதனால், ஜான்சி நீதிமன்றம் ராக்கிக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.