பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: பிரதமர் மோடி, தலைவர்கள் இரங்கல்

ஆஷா போஸ்லே

ஆஷா போஸ்லே

Updated on
2 min read

மும்பை: பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 92.

‘இந்தியாவின் இசைக்குயில்’ என்று புகழப்பட்ட பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கை ஆஷா போஸ்லே. இவரும் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படப் பின்னணிப் பாடகியாக பல்வேறு சாதனைகளைப் படைத்து வந்தார். இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி தீவிர சோர்வு மற்றும் மார்பகத் தொற்று காரணமாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஆஷா போஸ்லே நேற்று காலமானார். அவருக்கு வயது 92.

சகோதரி லதா மங்கேஷ்கர் போல இவரும் திரைத் துறையில் சமமாக பிரபலமானார். எனினும், இருவருக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அன்போடு இருந்தனர். லதா மங்கேஷ்கர் கடந்த 2022 பிப்.6-ம் தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 92 என்பது குறிப்பிடத்தக்கது.

10 வயது முதலே.. ஆஷா போஸ்லே 10 வயது முதலே திரைப்படத் துறையில் பின்னணிப் பாடகியாக வலம் வந்தவர். கடந்த 1943-ம் ஆண்டு மஜ்ஹாபால் என்ற மராத்தி திரைப்படத்தில் முதன்முதலாக சலா சலா நவ் பலா என்ற பாடல் பாடினார். தொடக்கத்தில் சாதாரணமாகப் பாடி வந்த ஆஷா போஸ்லே பின்னர் கஜல், பஜன், பாப் போன்ற அனைத்து இசை வடிவங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

ஷர்மிளா தாக்குர், ஆஷா பரேக், ரேகா, ஊர்மிளா மடோன்கர், கரீஷ்மா கபூர், ஐஸ்வர்யா ராய், ஷமிதா ஷெட்டி உட்பட பிரபல பாலிவுட் நடிகைகளுக்கு இவர் பாடல் பாடியுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு தனது 90-வது வயதில் துபாயில் நடந்த இசை நிகழ்ச்சியில் 3 மணி நேரம் மேடையில் நின்று அசராமல் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார் ஆஷா.

2 தேசிய விருதுகள்: கடந்த 1981-ல் உம்ராவ் ஜான் என்ற இந்திப் படத்தில் பாடிய பாடல்களுக்காக முதல்முறையாக தேசிய விருது பெற்றார். அதற்குப் பிறகு, 1988-ல் ஒரு தேசிய விருது பெற்றார். இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை கடந்த 2000-ம் ஆண்டு பெற்றார். 2008-ம் ஆண்டு ஆஷா போஸ்லேவுக்கு நாட்டின் மிக உயரிய பத்ம விபூஷண் விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. ஜாக்கி ஷெராப் நடித்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘லைப் ஈஸ் குட்’ என்ற திரைப்படத்தில் ஆஷா போஸ்லே கடைசியாக பாடல் பாடினார்.

இசை வரலாற்றிலேயே மிக அதிகமான பாடல்களைப் பதிவு செய்த கலைஞராக ஆஷா போஸ்லேவின் பெயர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவர் தமிழ் உட்பட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில் ஆஷா போஸ்லே சில பாடல்களே பாடியுள்ளார்.

எனினும் அவை அனைத்தும் சிறந்த பாடல்களாக அமைந்துள்ளன. இளையராஜா இசையில் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில், ‘செண்பகமே செண்பகமே’ பாடல் பாடி பிரபலமானார். அதன்பின்னர் மீரா படத்தில் இளையராஜா இசையில் ‘ஓ பட்டர்ஃபிளை’ பாடல் இசை ரசிகர்களைத் திக்கு முக்காட வைத்தது.

ஹே ராம் படத்தில் ‘நீ பார்த்த பார்வைகள்’, இருவர் படத்தில் ‘வெண்ணிலா வெண்ணிலா’, வித்யாசாகர் இசையில் சந்திரமுகி படத்தில் ‘கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்’, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அலைபாயுதே படத்தில் ‘செப்டம்பர் மாதம்’ ஆகிய பாடல்களையும் பாடியுள்ளார். ஆஷா போஸ்லேவின் மறைவு லட்சக்கணக்கான இசைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இவரது கணவர் பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன். ஆஷா போஸ்லேவின் முதல் கணவருக்கு 2 மகன்கள், ஒரு பெண் இருந்தனர். அவர்களில் ஆஷாவின் மகள், மூத்த மகன் ஹேமந்த் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். ஆஷா போஸ்லேவின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 4 மணிக்கு மும்பை சிவாஜி பார்க் பகுதியில் நடைபெறுவதாக அவரது இளைய மகன் ஆனந்த் போஸ்லே தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தி: இந்தியா நேசித்த மிக முக்கியமான மற்றும் பன்முகத் திறமைவாய்ந்த குரல்களில் ஆஷா போஸ் லேவின் குரலும் ஒன்று. அவரது அசாத்தியமான இசைப் பயணம் பல பத்தாண்டுகளாக தொடர்ந்தது. அது நமது கலாச்சாரம், பாரம்பரியத்தை மேம்படுத்தியது. அவரது குரல் உலகம் முழுவதும் ஏராளமான இதயங்களைச் சென்றடைந்தது.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மறைந்தாலும் அவரது குரல் இன்னும் பல தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கும். அவரது பாடல்கள் மக்கள் மனதில் என்றென்றும் உயிர்ப்புடன் இருக்கும். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

‘ஆஷா போஸ்லே தனது குரல் மூலமாக என்றென்றும் நம்மிடையே இருப்பார்’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், இசையமைப்பாளர்களும் ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>ஆஷா போஸ்லே</p></div>
பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: ஈரான் மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in