பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: ஈரான் மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டம்

இஸ்லாமாபாத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க துணை அதிபர்  வான்ஸ். உடன் அமெரிக்க சிறப்பு பிரதிநிதிகள் ஸ்டீவ் விட்காப், ஜெராட் குஷ்னர். படம்: பிடிஐ

இஸ்லாமாபாத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க துணை அதிபர் வான்ஸ். உடன் அமெரிக்க சிறப்பு பிரதிநிதிகள் ஸ்டீவ் விட்காப், ஜெராட் குஷ்னர். படம்: பிடிஐ

Updated on
3 min read

வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. 21 மணி நேர ஆலோசனையில் இருதரப்பு இடையே எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

கடந்த பிப்.28-ம் தேதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இரு தரப்பும் இணைந்து 2 வாரங்களுக்கு தற்காலிக போர்நிறுத்தத்தை அமல் செய்தன. இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான உயர் நிலைக் குழுக்கள் பல்வேறு கட்டங்களாக 21 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, ஈரான் குழுவினர் நேற்று நாடு திரும்பினர்.

முன்னதாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியதாவது: ஈரான் உடனான 21 மணி நேர பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இது ஈரானுக்கு மோசமான செய்தி ஆகும். அணு ஆயுத திட்டத்தை கைவிட ஈரானிடம் வலியுறுத்தினோம். இதற்கு ஈரான் தரப்பு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. அணு ஆயுத திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்பதே எங்களது பிரதான நோக்கம். எங்கள் நிலைப்பாடு மற்றும் முடிவை தெளிவாக கூறிவிட்டோம். இனிமேல் ஈரான் தரப்பே இறுதி முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு வான்ஸ் கூறினார்.

ஹார்முஸ் ஜலசந்தி குறித்து அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்பது குறித்தும் அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. அமெரிக்க துணை அதிபர் வான்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘எங்களது கோட்பாடுகளை அமெரிக்க அரசிடம் எடுத்துரைத்து உள்ளோம். ஈரானின் நம்பிக்கையை பெறுவது அமெரிக்காவின் கையில் உள்ளது. ராஜ்ஜியரீதியிலான அல்லது ராணுவ நடவடிக்கை மூலம் ஈரான் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் துணை பிரதமர் முகமது இஷாக் டார் இஸ்லாமாபாத்தில் கூறியபோது, ‘‘அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தாலும் போர்நிறுத்தத்தை இரு நாடுகளும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மேற்கு ஆசியாவில் நிரந்தர அமைதி திரும்ப வேண்டும்’’ என்றார்.

டெஹ்ரானில் ஈரான் வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயிகூறியபோது, ‘‘பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தையில், சில விவகாரங்களில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. ஆனால், 3 விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இதன் காரணமாக பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. ஈரானின் உரிமைகள், ஈரான் மக்களின் நலன்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது’’ என்றார்.

3 விவகாரங்கள் என்ன? - அமெரிக்கா - ஈரான் இடையே 21 மணி நேர பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் முதல் 7 மணி நேரம் இரு தரப்பு நிபந்தனைகள் குறித்து பாகிஸ்தான் சமரச முயற்சிகளில் ஈடுபட்டது. அடுத்த 14 மணி நேரம் அமெரிக்கா, ஈரான் பிரதிநிதிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், 3 விவகாரங்களில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

யுரேனியத்தை செறிவூட்டும் திட்டத்தை (அணு ஆயுதம்) கைவிட ஈரான் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு தொடர்ந்து ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு, எண்ணெய் கப்பல்களுக்கு சுங்கவரி விதிப்போம் என்று ஈரான் அறுதியிட்டு கூறியது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் தரப்பு கோரியது. இந்த 3 விவகாரங்களால்தான் அமைதிப் பேச்சு தோல்வியில் முடிந்தது. இதன் அடுத்த கட்டமாக ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை: ஈரானுக்கு தேவையான ஆயுதங்கள், வான் பாதுகாப்பு கவசங்களை சீனா தொடர்ந்து வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் ஈரானுக்கு கூடுதலாக ஆயுதங்களை அனுப்ப சீனா திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வாஷிங்டனில் நேற்று கூறும்போது, “ஈரானுக்கு சீனா ஆயுதங்களை வழங்குவது உறுதி செய்யப்பட்டால் அந்த நாடு மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்கும்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சீன வெளியுறவுத் துறைசெய்தித் தொடர்பாளர் கூறும்போது, “அமெரிக்க தரப்பு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தக்கூடாது. அமெரிக்கா, ஈரான் போர் மிகவும் தீவிரமான பிரச்சினை ஆகும். இதில் பதற்றத்தை தணிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் கருத்து வெளியிடக்கூடாது’’ என்றார்.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும்: ட்ரம்ப் அறிவிப்பால் பதற்றம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாக திறக்க வேண்டும். அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், சிறப்பு தூதர்ஸ்டீவ் விட்காப், ஜெராட் குஷ்னர், பாகிஸ்தான் ராணுவதளபதி ஆசிம் முனீர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் ஈரானுடன் அமைதிப் பேச்சு நடத்தினர். இந்தியா உடனான போரின்போது (இந்தியா- பாகிஸ்தான் போர்) சுமார் 5 கோடி மக்களின் உயிரிழப்பை இவர்களே தடுத்தனர்.

பாகிஸ்தானில் இவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், அணு ஆயுத திட்டத்தை கைவிட மாட்டோம் என்று ஈரான் கூறியுள்ளது. மோசமானவர்களின் கையில் அணு ஆயுதம் இருப்பதை ஏற்க முடியாது. ஹார்முஸ் ஜலசந்தியில் வீசப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். எங்கள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால், ஈரானைநரகமாக மாற்றுவோம். ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் நடவடிக்கை விரைவில் தொடங்கப்படும். போருக்கு தயாராக உள்ளோம். ஈரானின் பெரும் பகுதியை அழித்துவிட்டோம். தேவைப்பட்டால் மீதமுள்ள பகுதிகளையும் அழிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஈரான் இஸ்லாமிய புரட்சிப் படை வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரான் அரசால் அனுமதி வழங்கப்பட்ட சரக்கு கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல முடியும். போர்க் கப்பல்கள் நுழைய முயற்சித்தால் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்துவோம்’ என்று எச்சரித்துள்ளது. இதனால், போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.

<div class="paragraphs"><p>இஸ்லாமாபாத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க துணை அதிபர்  வான்ஸ். உடன் அமெரிக்க சிறப்பு பிரதிநிதிகள் ஸ்டீவ் விட்காப், ஜெராட் குஷ்னர். படம்: பிடிஐ</p></div>
“எங்களை அச்சுறுத்திய ஈரான் இப்போது உயிர்பிழைக்கப் போராடுகிறது” - நெதன்யாகு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in