

ராவணனாக யஷ்
‘ராமாயணா’ படத்தின் முதல் பாகத்தில் ராவணன் கதாபாத்திரம் அதிகநேரம் திரையில் தோன்றினாலும், படம் அவரை கதாநாயகனாக சித்தரிக்கவில்லை என படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு ‘ராமாயணா’ என்கிற இரண்டு பாக திரைப்படத்தை நிதேஷ் திவாரி இயக்கி உள்ளார். இதன், முதல் பாகமான ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’ தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று வெளியானது. படம் வெளியானதில் இருந்து அதன் கதாபாத்திர சித்தரிப்புகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
ராமன் குறித்த படத்தில் ராவணனுக்கு ஏன் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்கிற கேள்விகளும் அதில் அடக்கம். இந்த விமர்சனத்துக்கு பதில் அளிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார்.
செய்தி தொலைக்காட்சி ஒன்றில் நடந்த உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நமித் மல்ஹோத்ரா, ‘நாங்கள் ராவணனை நல்லவனாக சித்தரிக்கவில்லை. மக்கள் படத்தில் பார்த்தது சூப்பர் ஸ்டாரான யஷ்ஷைத்தான். அவரின் நடிப்பை அவர்கள் விரும்பி இருக்கிறார்கள். படம் முழுவதும் ராவணன் எந்த ஒரு நல்ல செயலையும் செய்யவில்லை. அவர் அழிவை உருவாக்கி, பயங்கரத்தைப் பரப்பியதால் கடவுளான ராமர் வந்து அவரை அழித்தார்.
நாங்கள் ஓர் உலகளவிலான படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்பதை பார்வையாளர்கள் உணர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ராவணனை எங்கேயும் பெருமைப்படுத்தவில்லை. குழந்தைப் பருவத்தில் இருந்து அவர் எப்படி ராவணனாக உருவானார் என்பதை நாங்கள் காட்டி உள்ளோம். அவர் தசாந்தன். ஆனால் அந்தக் குழந்தை அவ்வளவு சக்தி வாய்ந்தவராக மாறியது ஏன்?
யாரும் இதுவரை கேட்காத முக்கியமான கேள்வி, ராவணன் தீயவனாக இருந்தால், கடவுளர்களான பிரம்மாவும் சிவனும் ஏன் அவருக்கு வரங்கள் அளிக்க வேண்டும்? அப்படி கடவுள் அவருக்கு வரங்கள் அளித்திருக்கிறது என்றால், அவற்றைப் பெற அவர் ஏதாவது செய்திருக்க வேண்டும்” என்று விளக்கம் அளித்தார்.
நிதேஷ் திவாரி இயக்கி இருக்கும் ராமாயணா படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ்ஷும் நடித்து உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இசை அமைத்துள்ள இப்படம் உலகம் முழுவதும் ரூ.1,790 கோடி வரை வசூலைக் கடந்துள்ளது.