“கலாச்சாரம் இதயத்தில் உள்ளது, உடையில் இல்லை” - கங்கனாவுக்கு கிருத்தி சனோன் பதிலடி

“கலாச்சாரம் இதயத்தில் உள்ளது, உடையில் இல்லை” - கங்கனாவுக்கு கிருத்தி சனோன் பதிலடி
Updated on
1 min read

மும்பை: நகை விளம்பரம் ஒன்றில் ரக்‌ஷாபந்தன் பண்டிகையைக் கொண்டாடும் போது அணிந்திருந்த உடை குறித்து பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் சுட்டிக்காட்டிய விமர்சனத்திற்கு, நடிகை கிருத்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான நகை விளம்பரம் ஒன்றில், நடிகை கிருத்தி சனோன் நவீன பாணியிலான 'பிராலெட்' ரக ஆடையை அணிந்து ரக்‌ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 

இதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இன்றைய பெண்களுக்குப் பலவித ஆடைகள் கிடைக்கக்கூடிய சூழலில், சொந்த சகோதரனுக்குக் கயிற்றைக் கட்டும்போது எதற்காக பிகினி அல்லது உள்ளாடை போன்ற ஆடைகளை அணிய வேண்டும்? இந்த விளம்பரம் திட்டமிட்டே அருவருப்பாக உருவாக்கப்பட்டது போல் உள்ளது" எனக் காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.

கங்கனாவின் இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிருத்தி சனோன் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு பண்டிகையின் உண்மையான சாரம்சம் நீங்கள் அணியும் ஆடைகளில் இல்லை; அந்தப் பாரம்பரியத்தின் மீது நீங்கள் வைத்துள்ள உணர்வுகளிலும் மதிப்பிலும்தான் உள்ளது. ரக்‌ஷா பந்தன் என்பது பாதுகாப்புக்கான ஒரு புனிதமான பிணைப்பு. 

நானும் எனது சகோதரியும் ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக் கொள்கிறோம்; ஒரு சகோதரனைப் போலவே எங்களாலும் பரஸ்பரம் பாதுகாப்பு அளிக்க முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். இந்த ஆசியும் வாக்கும் எங்கள் வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளான நாய் வரை நீள்கிறது. ஏனெனில் அவையும் எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கம்தான்.

பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நாம் நிறுத்தப் போகிறோம்? காலப்போக்கில் பாரம்பரிய ஃபேஷன் எவ்வளவோ வளர்ச்சியடைந்து விட்ட போதிலும், இன்னும் ஒரு பெண்ணின் கலாச்சார மதிப்பை அவர் அணியும் உடையைக் கொண்டே மதிப்பிடுகிறார்கள்.

பெண்களின் கலாச்சாரமும் பாரம்பரியமும் அவர்களின் இதயத்தில் உள்ளதே தவிர, அவர்களின் உடைகளின் கழுத்து அமைப்பில் இல்லை" என்று கிருத்தி சனோன் தெரிவித்துள்ளார்.

“கலாச்சாரம் இதயத்தில் உள்ளது, உடையில் இல்லை” - கங்கனாவுக்கு கிருத்தி சனோன் பதிலடி
‘பென்ஸ்’ படக்குழு மீது நிவின் பாலி அதிருப்தி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in